42 year Kerala man dies after video share on social media web
இந்தியா

2 வீடியோக்களை ஒட்டி.. FAKE VIDEO வெளியிட்டாரா இளம்பெண்..? அவமானத்தில் இறந்த நபர்! என்ன நடந்தது?

கேரளாவில் தன்னுடன் பேருந்தில் பயணித்த ஒருவர் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக இளம்பெண் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட நபர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

Rishan Vengai

கேரளாவில், 42 வயதான தீபக் என்பவர், சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவால் மன அழுத்தத்தில் தற்கொலை செய்துகொண்டார். இளம்பெண் ஷிம்ஜிதா முஸ்தபா, தன்னை தவறான முறையில் தொட்டதாக வீடியோ பதிவு செய்து பகிர்ந்ததால் தீபக் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இது அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, உயிரை மாய்த்துக்கொள்ள தூண்டியது.

நடந்தது என்ன?

கேரளா மாநிலம் கோழிக்கோடு கோவிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 42 வயதான நபர் தீபக் என்று சொல்லப்படுகிறது. இவர் துணைக்கடை ஒன்றில் வேலைபார்த்துவந்துள்ளார். தன்னுடைய வேலை சம்பந்தமாக கடந்த 15ஆம் தேதி கண்ணூர் சென்ற நபர், பையனூரில் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.

அப்போது பேருந்தில் பயணம் செய்த தீபக், அருகிலிருந்து இளம்பெண்ணை பாலியல் ரீதியாக தொட்டு அநாகரீகமாக நடந்துகொண்டதாக வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலானது.

வீடியோவை சமூகவலைதளங்களில் பகிர்ந்ததாக சொல்லப்படும் ஷிம்ஜிதா முஸ்தபா என்ற இளம்பெண், தன்னுடைய மொபைலில் செல்ஃபி வீடியோ ஒன்றை தீபக்கிற்கு தெரியாமல் எடுத்து இணையத்தில் பதிந்துள்ளார். இந்த வீடியோ 20 லட்சத்துக்கும் மேலான வியூஸ்களை கடந்ததோடு, சம்பந்தப்பட்ட தீபக் என்பவர் மீது எதிர்மறையான கமெண்ட்களும், வசைபாடுதல்களும் எழ வழிவகை செய்துள்ளது. இந்த விவகாரம் குறித்து காவல்துறையில் வழக்கு பதிவுசெய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

உயிரை மாய்த்துக்கொண்ட நபர்..

இளம்பெண் பகிர்ந்த வீடியோ சமூகவலைதளங்களில் கடந்த 4 நாட்களாக பேசுபொருளாக மாறியநிலையில், சம்பந்தப்பட்ட தீபக் என்பவர் மீது கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத தீபக் அவமானத்தால் அதிக மனஅழுத்தத்திற்கு சென்றதாக சொல்லப்படுகிறது. அதிகப்படியான வசைபாடுதல்களால் மனவேதனையில் இருந்த தீபக், தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார் என்ற அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது.

காவல்துறையினரின் கூற்றுப்படி, தீபக்கின் பெற்றோர் துயரச்சம்பவம் நடந்தபோது வீட்டில் இருந்துள்ளனர். அறையில் தனியாக இருந்த தீபக் பலமுறை அழைத்தபோதும் பதிலளிக்காததால், அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து கதவை உடைத்துள்ளனர். அப்போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கூற்றுப்படி, இளம்பெண் பகிர்ந்த போலி வீடியோ வைரலான பிறகு தீபக் கடுமையான மன அழுத்தத்தில் இருந்தார், மேலும் குற்றச்சாட்டுகளால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். இளம்பெண்ணால் பகிரப்பட்ட வீடியோ ஆன்லைன் விளம்பரத்திற்காக மட்டுமே உருவாக்கப்பட்டது என்றும், தீபக் எப்போதும் அமைதியாக இருக்கக்கூடிய நபர் என்றும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

இரண்டு வீடியோக்களை ஒட்டி..

சம்பந்தப்பட்ட இளம்பெண்ணான ஷிம்ஜிதா முஸ்தபா செய்தியாளர்களிடம் கூறுகையில், “கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பையனூரில் பேருந்தில் பயணம் செய்தபோது, ​​அந்த இளைஞரின் முன் நின்ற வேறொரு பெண் மிகவும் சங்கடமாக இருப்பதை உணர்ந்தேன். அவர் அந்தப்பெண்ணிற்கு மிக அருகில் நின்று கொண்டிருந்தார். நான் ஒரு செல்ஃபி வீடியோ எடுப்பதையும் அவர் பார்த்திருந்தார். சிறிது நேரம் அவர் மிகவும் கூலாக எதுவும் தெரியாதவர் போல நின்றிருந்தார். பின்னர், பேருந்தில் நெரிசல் குறைந்ததும், அவர் மீண்டும் என் அருகில் நிற்க முயன்றார், நான் அந்த சம்பவத்தை மீண்டும் வீடியோவாக பதிவு செய்தேன். நான் இரண்டு வீடியோக்களையும் எடிட் செய்து அவற்றை ஒற்றை வீடியோவாக வெளியிட்டேன்” என்று கூறியுள்ளார். மேலும் அந்த நபர் இறந்ததது குறித்து பேசிய அப்பெண், ‘அவர் குற்ற உணர்ச்சியால் இறந்துவிட்டதாக’ கூறியிருப்பதாகம் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் இவ்விவகாரம் குறித்து வீடியோ வெளியிட்டிருக்கும் பெண் ஒருவர், ”சமூக வலைதளத்தில் பிரபலமாகவேண்டும் என்பதற்காக சிலர் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார்கள் என்பதற்கு ஒரு மோசமான எடுத்துக்காட்டாக இந்த சம்பவம் மாறியுள்ளது. வைரலான வீடியோவில் அந்த பெண்ணே தான், அவர் இடிக்கவேண்டும் என்பதற்காக சென்று அவருக்கு நெருக்கமாக நிற்கிறாள். பயணத்தின்போது ஒருவரை ஒருவர் இடித்துக்கொள்வது சாதாரண விசயம், ஆனால் அதை வீடியோ எடுத்து தவறான முறையில் என்னைத் தொட்டார் என பெண் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த நபர் உயிருடன் இல்லை. இறந்தவரின் குடும்பத்திற்கு என்ன சொல்வதென்றே எனக்கு தெரியவில்லை. ஒரு பெண் வழக்கறிஞர் இந்தவழக்கில் பாதிக்கப்பட்டவருக்காக வழக்கு தொடர்ந்துள்ளார் என கேள்விப்பட்டேன், இவருக்கான நீதி கிடைக்கும் என நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் பலர் இறந்துபோன தீபக்கிற்கு ஆதரவாகவும், வீடியோவை பரப்பிய இளம்பெண்ணுக்கு எதிராகவும் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல