இந்தியா

கொரோனாவால் 41 கர்ப்பிணிகள் உயிரிழப்பு: 149 நோயாளிகள் தற்கொலை - கேரள அரசு தகவல்

கொரோனாவால் 41 கர்ப்பிணிகள் உயிரிழப்பு: 149 நோயாளிகள் தற்கொலை - கேரள அரசு தகவல்

JustinDurai
மாநிலத்தில் இதுவரை 41 கர்ப்பிணி பெண்கள் கொரோனா தொற்றுக்கு இறந்துள்ளதாகவும், 149 நோயாளிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்.
கேரளா மாநில சட்டப்பேரவையில் கொரோனா பாதிப்பு தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வீணா ஜார்ஜ், ''மாநிலத்தில் பெரும்பாலான மக்கள் நோய் எதிா்ப்பு சக்தியைப் பெற்றுவிட்டனர். ஐசிஎம்ஆர் ஆய்வு அறிக்கையின்படி கேரளாவில் கொரோனா நோய் எதிர்ப்பாற்றல் கண்டறியப்பட்டோர் விகிதம் கடந்த 2020, மே, ஆகஸ்ட் மற்றும் டிசம்பரில் முறையே 0.33%, 0.88% மற்றும் 11.6% ஆக இருந்தது. 2021 மே மாதத்தில் 44.4 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பரில் மாநில அரசு நடத்திய நோய் எதிர்ப்பாற்றல் ஆய்வில் இது 82.61 சதவீதமாக உயர்ந்துள்ளது. கேரளாவின் மொத்த மக்கள்தொகையில் 17 சதவீதம் பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளவர்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடலோர மாவட்டங்களில் வசிக்கும் மக்களில் 93.3 சதவீதம் பேர் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திவிட்டனா். எனவே, இனி வரும் காலங்களில் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கும். கொரோனா பாதிப்பு தொடங்கிய பிறகு கடந்த ஒன்றரை ஆண்டுகளில் கொரோனா நோயாளிகள் 149 பேர் தற்கொலை செய்து கொண்டனர். கொரோனாவுக்கு 41 கர்ப்பிணிப் பெண்களும் உயிரிழந்துள்ளனர்'' என்றார்.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி கேரளத்தில் 49.30 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் கேரளத்தில் 9,445 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது இது மிக அதிக தினசரி பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.