உலகின் மிகப்பெரிய பொதுமக்கள் கூடும் நிகழ்வான, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில், கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய இந்த விழா, இன்றுடன் (பிப்.26) நிறைவுபெற இருக்கிறது. கிட்டத்தட்ட 40 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல்வேறு முக்கியமான சம்பவங்கள் அரங்கேறின. அதில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
இந்த மகா கும்பமேளாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் திரை பிரபலங்களும் நீராடினர்.
மகா கும்பமேளா நிகழ்வில், அழகான மயக்கும் கண்கள், ஈர்க்கும் சிரிப்பு, நம்பிக்கையான பேச்சு, எளிமையான தோற்றம் என பாசி மணி விற்கும் 16 வயது இளம்பெண் மோனலிசா போஸ்லே ஒரேநாளில் உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் வைரலானார்.
ஜனவரி 29 அன்று திரிவேணிச் சங்கம கூட்ட நெரிசலால் ஏற்பட்ட விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அடுத்து, பிப்ரவரி 15 அன்று டெல்லி ரயில் நிலையத்தில் மகா கும்பமேளாவுக்குச் செல்லக் காத்திருந்த பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் ஏற்பட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்தனர்.
திரிவேணி சங்கமத்தில், உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் படையெடுத்த நிலையில், நிலையில், பிரயாக்ராஜ் நகருக்கான விமானக் கட்டணம் 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கடந்தது. தவிர, ரயில்களின் ஏசி பெட்டிகளில் கண்ணாடி உடைப்பு சம்பவங்களும் அரங்கேறின.
ஜனவரி 19ஆம் தேதி கும்பமேளாவுக்காக அமைக்கப்பட்ட கூடாரங்களின் ஒரு பகுதியில் சிலிண்டர் வெடித்ததால் தீப்பற்றியது. தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட கூடாரங்களுக்கு தீ பரவியது. ஆனால், இதில் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. இதைத் தொடர்ந்து ஜனவரி 25ஆம் தேதி வாரணாசியில் கும்பமேளாவுக்கு வந்த கார்கள் தீப்பிடித்து எரிந்தன. அதுபோல், பிப்ரவரி 7ஆம் தேதியும் கும்பமேளாவுக்கு அருகில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
கும்பமேளாவிற்குச் சென்ற பக்தர்களால் பிரயாக்ராஜ் நகர் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. குறிப்பாக, பிப்ரவரி 9ஆம் தேதி 300 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகன நெருக்கடி ஏற்பட்டது. பிரயாக்ராஜ் நகரை இணைக்கும் வாரணாசி, ஜான்பூர், மிர்சாபூர், கௌசாம்பி, பிரதாப்கர், ரேவா மற்றும் கான்பூர் ஆகிய அனைத்து முக்கிய வழித்தடங்களிலும் வாகனங்கள் நீண்டவரிசையில் காத்து நின்றது பேசுபொருளானது. இதேபோல கும்பமேளாவின் இறுதி நாட்களிலும் வாகன நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
திரிவேணி சங்கமத்தில் அதிகளவு பாக்டீரியா இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வுகள் தெரிவித்தன. அந்த நீரானது, மனிதர்கள் குளிப்பதற்கு உகந்த தரத்தில் இல்லை எனத் தெரிய வந்துள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை சமர்ப்பித்தது. இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உபி அரசு திலளிக்க ஆணையிட்டுள்ளது. முன்னதாக, இந்தக் குற்றச்சாட்டை உபி முதல்வர் மறுத்திருந்தார்.
திரிவேணிச் சங்கமத்தில் பெண் ஒருவர் தாம் பயன்படுத்தும் செல்போனை நீரில் மூழ்கி எடுக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, உறவினரால் கும்பமேளாவிற்கு வர முடியாத காரணத்தால், பெண் ஒருவர், அவருக்கு வீடியோ கால் செய்தபடியே அந்த போனை தண்ணீரில் முக்கி எடுத்தார். இதேபோல், மகா கும்பமேளாவில் ’டிஜிட்டல் நீராடல்’ என்ற பெயரில் புகைப்படங்களை கங்கை நதியில் மூழ்கச் செய்து உள்ளூர் நபர் பணம் சம்பாதித்தது பேசுபொருளானது.
மகா கும்பமேளா விழா ஏற்பாடுகள் மற்றும் விபத்துகள் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜோஷிமத்தின் சங்கராச்சார்யா அவிமுகேஷ்வரானந்த் சரஸ்வதி, சமாஜ்வாதியைச் சேர்ந்த முன்னாள் முதல்வரும், மக்களவை எம்பியுமான அகிலேஷ் யாதவ் ஆகியோர் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
நடிகர் பிரகாஷ் ராஜ், மகா கும்பமேளாவில் நீராடியதாக புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவியது. இணையத்தில் அதுகுறித்து உண்மைச் சம்பவங்களும் சரிபார்க்கப்பட்டன. உண்மையில், அப்படம் ஏஐ தொழில் நுட்பம் உருவாக்கப்பட்டது என ஊடகங்களும் தெரிவித்திருந்தன. இந்த நிலையில், அந்தப் புகைப்படம் போலியானது என்று பிரகாஷ் ராஜ் விளக்கம் அளித்திருந்தார்.