ஆந்திரப்பிரதேசம் முகநூல்
இந்தியா

ஆந்திரா : சக மாணவனை தாக்கிய 4 மாணவர்கள்.. கன்னத்தில் கடித்த கொடூரம்!

ஆந்திராவில் கல்லூரி பயிலும் மாணவர் ஒருவரை அதே கல்லூரியில் படிக்கும் நான்கு மாணவர்கள் மிருகங்கள் போல கொடூரமாக தாக்கும் வீடியோ காண்போரை பதைபதைப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

ஆந்திராவில் கல்லூரி பயிலும் மாணவர் ஒருவரை அவருடன் இணைந்து படிக்கும் நான்கு மாணவர்கள் மிருகங்கள் போல கொடூரமாக தாக்கும் வீடியோ காண்போரை பதைபதைப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

ஆந்திரப்பிரதேச மாநிலம், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் உள்ள குடாபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமேஸ்வரபா ஜெயசாய் யுவராஜ் என்னும் இளைஞர். இவர், மல்கிபுரத்தில் உள்ள AFDT என்ற தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். வகுப்பு கண்காணிப்பாளரான யுவராஜ் மீது அதே கல்லூரியை சேர்ந்த நான்கு மாணவர்கள் கோபமாக இருந்ததாக தெரிகிறது.

யுவராஜ் (இளஞ்சிவப்பு நிற சட்டை) தாக்கப்படும் காட்சி

இந்த நிலையில்தான், சம்பவ தினத்தன்று, யுவராஜை கல்லூரிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறிய அந்த நான்கு மாணவர்கள் கல்லூரிக்கு அழைத்துச் செல்லாமல், யாரும் இல்லாத ஒரு தென்னை தோப்புக்கு யுவராஜை அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு பழிவாங்கும் நடவடிக்கை காரணமாக, உடன் வந்த மூன்று மாணவர்கள் யுவராஜை சரமாறியாக தாக்கியுள்ளனர். இதனை மற்றொரு மாணவன் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

ஏறக்குறையாக இரண்டு மணி நேரமாக யுவராஜை தாக்கிய மாணவர்கள், பாட்டில்கள், தேங்காய் துருவி, கற்கள் என அங்கிருந்த பொருட்களால் மாறிமாறி அவரை சரமாறியாக தாக்கியுள்ளனர். தன்னை விட்டுவிடுமாறு யுவராஜ் பலமுறை கெஞ்சியும் அவர்கள் விடவில்லை. ஒருகட்டத்தில் யுவராஜின் சட்டையை கிழித்து, கன்னத்தில் மிருகத்தனமாக கடித்துள்ளார் ஒரு மாணவர். யுவராஜின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலானது, நான்கு நிமிடங்களுக்கு ரெக்கார்டு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் இது குறித்து வெளியில் தெரிவித்தால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். அங்கிருந்த ஒரு வழியாக தப்பித்த யுவராஜ் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணமான நான்கு மாணவர்களையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.