மகளிர் இட ஒதுக்கீடு மசோதா Pt web
இந்தியா

33% மகளிர் இட ஒதுக்கீடு | 1993-ல் முன்னெடுக்கப்பட்ட கோரிக்கை.. 2029-ல் அமலாகுமா? கடந்துவந்த பாதை!

பல தசாப்தப் போராட்டத்துக்கு பின் சட்டமாகிய மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை நிபந்தனையால் நடைமுறைக்கு தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுகிறது.

PT WEB

1996-2003 வரை பல முறை முயன்றும் நிறைவேறாத மகளிர் இடஒதுக்கீடு 2010இல் மாநிலங்களவையில் நிறைவேறினாலும் மக்களவையில் தோற்றது. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, 2023இல் ‘நாரி சக்தி வந்தன்’ சட்டமாக நிறைவேறியது. ஆனால் கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை நிபந்தனைகள் காரணமாக அமல்படுத்தும் காலம் 2029 அல்லது அதற்குப் பின் செல்லலாம் என விவாதம் நீடிக்கிறது.

இந்திய நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிர் இடஒதுக்கீடு என்பது நீண்ட வரலாறு கொண்ட அரசியல் போராட்டமாகும். 1949இல் அரசமைப்பு நிர்ணய அவையில் இது விவாதிக்கப்பட்டது. ஆனால் பெண்களுக்குத் தனி ஒதுக்கீடு அவர்களை அந்த எல்லைக்குள் முடக்கிவிடும் என்று சில பெண் உறுப்பினர்கள் கருதியதால் அது கைவிடப்பட்டது. பின்னர், 1993இல் அரசமைப்புச் சட்டத்தின் 73 மற்றும் 74ஆவது திருத்தங்கள் மூலம் உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு அமலானது.

நாடாளுமன்றம்

மக்களவை மற்றும் சட்டமன்றங்களில் இடஒதுக்கீடு வழங்க, 1996இல் பிரதமர் தேவகவுடா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு 81ஆவது அரசமைப்புச் சட்டத்திருத்த மசோதாவை அறிமுகம் செய்தது. ஆனால், இதர பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு "உள்ஒதுக்கீடு" வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையாலும், வேறு சில அரசியல் முரண்பாடுகளாலும் அது தோல்வியடைந்தது. 1998 முதல் 2003 வரை நான்கு முறை அறிமுகம் செய்யப்பட்டும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

2010இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மாநிலங்களவையில் இம்மசோதா நிறைவேறியது. இருப்பினும், கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பால் மக்களவையில் இது வாக்கெடுப்பிற்கு வரவில்லை. இறுதியில், 2023இல் பாஜக அரசு 'நாரி சக்தி வந்தன் அதினியம்' என்று பெயரிடப்பட்ட 106ஆவது அரசமைப்பு சட்டத்திருத்தம் மூலம் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் மகளிருக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதைச் சட்டமாக்கியது.

parliament

இச்சட்டத்தில், "தொகுதி மறுவரையறை" மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்த பின்னரே இடஒதுக்கீடு அமலாகும் என்ற நிபந்தனை சேர்க்கப்பட்டது. முதலாவதாக, இச்சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு எடுக்கப்படும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு வெளியிடப்பட வேண்டும். இரண்டாவதாக, அந்தப் புதிய தரவுகளின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை நடத்தப்பட வேண்டும்.

மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 850ஆக உயர்த்தப்பட வேண்டும் என்பதால், அதற்கு முன்பு தொகுதி மறுவரையறை அவசியம் என்று அரசு கூறியது. எனவே, 2026க்குப் பிறகு நடத்தப்படும் கணக்கெடுப்பின் அடிப்படையில் 2031இல் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டு, அதன் பின்னரே அதாவது 2034 மக்களவைத் தேர்தலில்தான் மகளிர் இடஒதுக்கீடு அமலாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

women

ஆனால், தற்போது 2029 மக்களவைத் தேர்தலிலேயே இதனைச் செயல்படுத்தும் நோக்கில் அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக, 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, தொகுதி மறுவரையறைப் பணிகளை முன்னதாகவே முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால் அனைத்து மாநிலங்களுக்கும் சீராக 50 விழுக்காடு இடங்கள் அதிகரிக்கப்படும் என அரசு உறுதியளித்துள்ளது.