பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்திய ராணுவம் ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கி பயங்கரவாதிகளின் கூடாரங்களை அழித்தது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலைத் தொடங்க, அதற்கும் இந்தியா பதிலடி கொடுத்தது. இதற்கிடையே இருதரப்பு தாக்குதலுக்கு அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததைத் தொடர்ந்து, தாக்குதல் முடிவுக்கு வந்தது. எனினும், எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
தாக்குதல் தொடர்ந்தால், அதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என இந்திய ராணுவம் எச்சரித்திருந்தது. இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்கு தகவல்கள் கிடைத்ததைத் தொடர்ந்து, அங்கு அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 13ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் ஷோபியானில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரின் அவந்திபோராவில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
தெற்கு காஷ்மீரில் புல்வாமாவின் துணை மாவட்டமான அவந்திபோராவின் நாடர் மற்றும் டிரால் பகுதியில் இந்த மோதல் தொடங்கியது. இந்த தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 48 மணி நேரத்தில் இது இரண்டாவது என்கவுன்டர் ஆகும். இந்த தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாதிகளின் அடையாளம் எதுவும் இன்னும் கண்டறியப்படவில்லை. எனினும், அப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து இந்திய ராணுவம் மற்றும் போலீஸார் கூட்டுத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.