ஜம்மு - காஷ்மீரில் தாக்குதல் | 3 பயங்கரவாதிகள் பலி.. இந்திய ராணுவம் பதிலடி!
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், இந்தியா தாக்குதலைத் தொடங்கி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் பதில் தாக்குதலைத் தொடங்கியதால், அதை இந்தியா தகர்த்தது. இதனால் இரு நாட்டின் எல்லைப் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டன.
இரு நாடுகளுக்கிடையே தாக்குதலைத் தடுக்கும் விதத்தில், அமெரிக்கா மத்தியஸ்தம் செய்தது. அதன்பேரில், இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டன. இதையடுத்து, மே 10ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து தாக்குதல் நிறுத்தம் அமல் ஆனது. எனினும், எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தாக்குதல் தொடர்ந்தால், அதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என இந்திய ராணுவம் எச்சரித்திருந்தது. அதுபோல் பிரதமர் மோடி நேற்று ஆற்றிய உரையிலும் இதையே எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று காலையில் ஜம்மு - காஷ்மீரின் ஷோபியானில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த மோதல் முதலில் குல்காமில் தொடங்கியதாகவும், பின்னர் அது ஷோபியான் பகுதி வரை நீடித்ததாகவும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, அங்கு சண்டை நடைபெற்று வருவதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய ராணுவம் தனது எக்ஸ் தளத்தில், "ஷோபியனின் ஷோகல் கெல்லர் பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவின் குறிப்பிட்ட ரகசியத் தகவலின் அடிப்படையில், இன்று, இந்திய ராணுவம் தேடுதல் வேட்டை மற்றும் தாக்குதல் நடவடிக்கையைத் தொடங்கியது. இந்த நடவடிக்கையின்போது, பயங்கரவாதிகள் கடும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதன் விளைவாக மூன்று தீவிர பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என பதிவிடப்பட்டுள்ளது.