குழந்தை திருமணத்தைத் தடுக்க, நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதையும் மீறிச் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஒடிசாவில் கடந்த 6 ஆண்டுகளாக தினமும் 3 குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருவதாக அம்மாநில அரசின் தரவறிக்கை தெரிவிக்கிறது.
அரசு தரவுகளின்படி மட்டுமே, 2019 முதல் 2025 பிப்ரவரி வரை ஒடிசா முழுவதும் 8,159 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளன. 30 மாவட்டங்களைக் கொண்ட ஒடிசாவில் அதிகபட்சமாக நபரங்பூரில் 1,347 குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. கஞ்சம் மாவட்டம் 966 வழக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. கோராபுட் மாவட்டம் 636 வழக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து மயூர்பஞ்ச், ராயகடா, பாலசோர், கியோஞ்சர், கந்தமால் மற்றும் நயாகர் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இதில் ஜார்சுகுடா மாவட்டத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கை கண்டறியப்பட்டுள்ளது.
குழந்தைத் திருமணத்தை ஒரே இரவில் முற்றிலுமாக நிறுத்த முடியாது. பெண்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்க, அவர்களுக்கு ஒரு சூழலையும் சமூகத்தையும் நாம் உருவாக்க வேண்டும். இவ்வகை திருமணங்கள் பழங்குடியினரின் பாரம்பரிய நடைமுறையாகவும் உள்ளது. வாழ்வாதாரத்திற்காக வேறு இடங்களுக்கு குடிபெயரும் பெற்றோர்கள், தங்கள் பெண்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், குடும்பத்திற்கு அவமானம் தரும் ஒருவருடன் ஓடிப்போய்விடுவார்களோ என்ற அச்சத்தில், சட்டப்பூர்வ வயதிற்கு முன்பே அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள்.
மேலும் பெண் 18 வயதை எட்டும்போது வரதட்சணையும் அதிகம் தர வேண்டியிருக்கும் என அஞ்சி இளவயதிலேயே அவர்களை திருமணம் செய்து தந்துவிடுகின்றனர். அவர்களுக்கு முறையான கல்வி அல்லது திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்து, அவர்களைச் சுயதொழில் செய்பவர்களாக மாற்றினால் இந்த அச்சுறுத்தல் முடிவுக்கு வரக்கூடும்” என்கிறார், சமூக ஆர்வலர் நம்ரதா சத்தா.
குழந்தைத் திருமணத்தைத் தடுக்க, ஒடிசா அரசு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் பஞ்சாயத்து, தொகுதி மற்றும் அங்கன்வாடி மட்டங்களில் விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்தி வருகிறது. இது தவிர, குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மாநில அளவிலான குழுக்களின் கூட்டங்களை அரசாங்கம் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் நடத்தி வருகிறது.
மறுபுறம் குழந்தைத் திருமணத்துடன் குழந்தைத் தொழிலாளர் முறையின் சவாலையும் அரசு எதிர்கொள்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில், தொழிலாளர்களாக வேலை செய்த 328 குழந்தைகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர். நடப்பு நிதியாண்டில் பிப்ரவரி 15 வரை, ஒடிசாவின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 45 குழந்தைத் தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர். குழந்தைத் தொழிலாளர் தடை மற்றும் ஒழுங்குமுறை சட்டம், 1986இன் கீழ், குழந்தைகளை வேலைக்கு அமர்த்தியவர்கள் மீது இதுவரை 159 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், ஒன்பது துறைகளுடன் ஒருங்கிணைந்து குழந்தை தொழிலாளர் ஒழிப்புக்கான மாநில செயல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.