கைதானவர்கள்
கைதானவர்கள்புதியதலைமுறை

தேனி | இன்றும் தொடரும் குழந்தைத் திருமணம்.. ஆண்டிப்பட்டி அருகே 14 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை!

ஆன்டிப்பட்டி அருகே 14 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய நபர் மற்றும் அவரின் தாய் தந்தை, சிறுமியின் தாய் உள்ளிட்ட ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறையினர் .
Published on

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே உள்ள கரட்டுப்பட்டி கிராமத்தை சோந்தவர் சேகர். இவரின் மகன் விக்னேஷ் கூலிதொழிலாளியாக உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவருக்குத் திருமணம் செய்ய முடிவெடுத்த குடும்பத்தினர் வருசநாடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமியைத் திருமணம் செய்து வைத்துள்ளனர். தற்போது அந்த சிறுமி கர்ப்பமடைந்ததை தொடர்ந்து கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேகர் குடும்பத்தினர் அதனைப் பதிவு செய்துள்ளனர். கர்ப்பமான பெண்ணுக்கு 14 வயது என்பதால் மருத்துவமனை அலுவலர்கள் கடமலை-மயிலை ஒன்றிய விரிவாக்க அலுவலர் மலர்கொடிக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து விரிவாக்க அலுவலர் சம்பந்தபட்ட சிறுமி வசிக்கும் வீட்டில் சென்று ஆய்வு நடத்தியதில் இருவீட்டாரும் சேர்ந்து சிறுமிக்கு திருமணம் நடத்தியது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து விரிவாக்க அலுவலர் இது குறித்து மயிலாடும்பாறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய விக்னேஷ் மற்றும் அவருடைய அப்பா சேகர், அம்மா மயில் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் லட்சுமி ஆகிய 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்தியாவில் பாரம்பரியமாக நடைபெற்று வந்த குழந்தைத் திருமணங்களைத் தடுக்க வேண்டும் என 1890களில் தொடங்கி பல போராட்டங்களும் சட்ட ரீதியான முன்னெடுப்புகளும் எடுக்கப்பட்டு 1930ம் ஆண்டு குழந்தைத் திருமண தடுப்புச்சட்டம் அமலுக்கு வந்தது. பின்னர் 1978ம் ஆண்டு அச்சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு பெண்களின் குறைந்த பட்ச திருமண வயது 18 எனவும், ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 21 எனவும் மாற்றப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக குழந்தைத் திருமணங்கள் குறைந்து இன்று பெரும்பாலும் இல்லாமல் போனாலும் இன்னும் அவ்வப்போது இப்படியான செய்திகள் வருவது இன்னும் இப்படியான குற்றங்கள் நடைமுறையில் உள்ளதை எடுத்துறைப்பது வருத்தமளிப்பதாகவே உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com