ஒடிசா முகநூல்
இந்தியா

ஒடிசா| ரயில் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்த சிறுவர்கள் - ஷாக் வீடியோ!

இதுகுறித்தான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

ஒடிசாவில் ரயில் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்த 3 சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ஒடிசாவின் போலங்கிர் மாவட்டத்தில் புருணபாணி ரயில் நிலையத்திற்கு அருகேயுள்ள தலுபலியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இதுகுறித்தான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதில், ஒரு சிறுவன் ரயில் தண்டவாள பாதையில் படுத்திருந்தநிலையில், இரண்டு சிறுவர்கள் அதனை ரீல்ஸாக செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளனர்.

அப்போது அதிவேகமாக வந்த ரயில் சிறுவனுக்கு எந்த தீங்கும் ஏற்படுத்தாத வண்ணம் கடந்து செல்ல, அதன்பிறகு மூன்று சிறுவர்களும் ஆரவாரம் செய்து கொள்ளும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.

இந்த சம்பவம் வைரலானநிலையில், சமூக ஊடக பயனர்கள் இந்த வீடியோவை பகிர்ந்து கவலை தெரிவித்து வருகின்றனர். இதனை செய்தது புருணபாணி நிலையத்திற்கு அருகில் வசிக்கும் சிறுவர்கள் என அடையாளம் காணப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து உள்ளூர் காவல்துறை தெரிவிக்கையில், “ரயில் பாதையில் படித்து கிடந்த சிறுவன், ரயில் கடந்து சென்றபோது மிகவும் பயந்ததாக கூறினார். தான் உயிர்ப்பிழைப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை என்று அவரே ஒப்புக்கொண்டார். சமூக ஊடகங்களில் அதிக கவனத்தை ஈர்ப்பதற்காக இது போன்ற செயல்களை செய்ததாகவும் சிறுவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.” என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ரயில்வே சட்டப் பிரிவுகள் 153, 145(b) மற்றும் 147 இன் கீழ் சிறுவர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறார் நீதிச் சட்டத்தின்படி மேலும் சட்ட நடவடிக்கைகள் நடந்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர் .