- ஜி.எஸ்.பாலமுருகன்
சத்தீஸ்கர் மாநிலம் அபுஜ்மாட் காட்டுப் பகுதியில், காவல் துறை மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது ஏற்பட்ட மோதலில் 27 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவோயிஸ்ட் பிரிவு பொதுச் செயலாளர் பசவராஜு என்கிற நம்பாலா கேசவராவ் உயிரிழந்தார். இது, கடந்த பல தசாப்தங்களில் முதல்முறையாக, இயக்கம் தலைவரின்றி செயல்பட வேண்டிய நிலையை உருவாக்கியுள்ளது. 70 வயதான நம்பாலாவின் மரணம், மாவோயிஸ்ட் இயக்கத்தின் மத்திய குழு மற்றும் அரசியல் பணிக்குழுவில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
பசவராஜுவின் மரணத்தையடுத்து, இயக்கத்தின் புதிய தலைவராக மல்லோஜுலா வேணுகோபால் மற்றும் திப்பிரி திருப்பதி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். வேணுகோபால், தெலங்கானாவைச் சேர்ந்த பிராமணர். முன்னாள் பேச்சாளர் மற்றும் முக்கிய அரசியல் வியூக வகுப்பாளர். திப்பிரி திருப்பதி, மாவோயிஸ்ட் இயக்கத்தின் மத்திய ராணுவக் குழுவில் உறுப்பினராகவும், சாதி சமநிலையை பிரதிபலிக்கும் வகையில் மேடிகா சமூகத்தைச் சேர்ந்தவராகவும் உள்ளார். இயக்கத்தில் உள்ள அழுத்தங்களைப் பொருத்து, புதிய தலைமை தேர்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பசவராஜுவின் மரணம், ஏற்கெனவே பலவீனமடைந்துள்ள மாவோயிஸ்ட் இயக்கத்திற்கு கடுமையான பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் தலைவர் கணபதி தற்போதைய சூழலில் செயல்படவில்லை. முக்கிய கமாண்டர்கள் பாதுகாப்புப் படைகளின் கண்காணிப்பில் உள்ள நிலையில், இயக்கம் சிதறலுக்குள்ளாகும் அபாயம் உள்ளது. சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில், பாதுகாப்புப் படைகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள், இயக்கத்தின் ஆதரவை மேலும் குறைத்துள்ளன. மேலும், சத்தீஸ்கரில் 27 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, நக்சல் ஒழிப்பில் கடந்த முப்பது ஆண்டுகளில் கிடைத்த மிக முக்கியமான வெற்றி என கூறினார். அடுத்த ஆண்டு மார்ச்க்குள் நக்சலிசம் இல்லாத இந்தியாவாக மாறும் என்றும் மீண்டும் உறுதிபட அவர் தெரிவித்தார். இந்த சூழலில் மாவோயிஸ்ட் இயக்கம் தனது எதிர்கால திசையை நிர்ணயிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது