புத்தாண்டு தினத்தை அடுத்து நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டின. தமிழகத்தில் சென்னை உட்பட பல இடங்களில் மக்கள் புதிய ஆண்டை வரவேற்றனர்.
ஒவ்வொரு வருடமும் ஜனவரி 1-ஆம் தேதி ஆங்கிலப் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025-ஆம் ஆண்டு நிறைவடைந்து 2026-ஆம் ஆண்டு பிறந்துள்ளது. புத்தாண்டு தினத்தை அடுத்து நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டின. குஜராத்தில் மக்கள் ஆடல் பாடலுடன் புத்தாண்டை வரவேற்றனர். கேரள மாநிலம் கொச்சியில் மக்கள் இசை நிகழ்ச்சிகளுடன் புத்தாண்டைக் கொண்டாடி மகிழ்ந்தனர். இமாச்சல் மாநிலம் சிம்லா மற்றும் மணாலியில் மக்கள், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கோவாவில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் புத்தாண்டை ஆடி பாடி உற்சாகத்துடன் கொண்டாடினர். காஷ்மீரின் குல்மார்க்கில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் ஏராளாமன மக்கள் பங்கேற்று புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். தவிர, சென்னை முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது.
சென்னை மெரினா கடற்கரை, பெசண்ட் நகர் கடற்கரை, கிழக்கு கடற்கரை சாலை என கடற்கரைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி 2026ஆம் ஆண்டை உற்சாகத்துடன் வரவேற்றனர். கடற்கரைகள் மட்டுமின்றி சென்னை முழுவதும் உள்ள நட்சத்திர விடுதிகள், கத்திப்பாரா சதுக்கம் என பொது இடங்களில் சிறுவர் முதல் பெரியோர் வரை கூடி புத்தாண்டை கொண்டாடினர். புதுச்சேரி கடற்கரையில் வாணவேடிக்கை, லேசர் ஷோ, இசை நிகழ்ச்சிகள் என வெகுஉற்சாகமாக புத்தாண்டு கொண்டாடப்பட்டது. புத்தாண்டையொட்டி புதுச்சேரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். அவர்கள், புத்தாண்டை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். ஆங்கிலப் புத்தாண்டையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நள்ளிரவு 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்ட நிலையில், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. புத்தாண்டை முன்னிட்டு ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.