அந்தமான்-நிக்கோபார் கிரேட் நிக்கோபர் தீவில் ரூ.81,000 கோடி மதிப்பில் துறைமுகம், விமான நிலையம், குடியிருப்பு, மின் நிலையம் அமைக்கும் மத்திய அரசின் திட்டம், 130 சதுர கிமீ வனப்பகுதி அழிப்பு, 10 லட்சம் மரங்கள் வெட்டுதல், சுனாமி அபாயம், 2,000க்கும் மேற்பட்ட உயிரினங்கள், லெதர்பேக் கடல் ஆமைகள் வாழிடம் அழிவு காரணமாக கடும் எதிர்ப்பை சந்திக்கிறது.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கூட்டத்தின் தென்கோடித் தீவான கிரேட் நிக்கோபார் தீவில், பல்வேறு உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தும் திட்டமாக 2021ஆம் ஆண்டு ரூ.81,000 கோடி மதிப்பீட்டில் ”தி கிரேட் நிக்கோபர் திட்டம்” மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டதின் படி, சர்வதேச கொள்கலன் மாற்றுத் துறைமுகம் (ICTT), ஒரு புதிய விமான நிலையம், 6.5 லட்சம் மக்கள் வரை வசிப்பதற்காக ஒரு குடியிருப்புப் பகுதி மற்றும் ஒரு மின் உற்பத்தி நிலையம் ஆகியவை இப்பகுதியில் ஏற்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம், கொழும்பு, சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய வெளிநாட்டுத் துறைமுகங்களைச் சார்ந்திருக்கும் இந்தியக் கப்பல்களின் தேவையைக் குறைக்க முடியும் எனவும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும், நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும் இந்தத் திட்டம் உதவும் என்று மத்திய அரசு கூறுகிறது.
எனினும், இத்திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு தேவைப்படும் நிலம் மற்றும் கடலின் அளவு 166 சதுர கிலோ மீட்டர் என மத்திய அரசு தெரிவித்திருக்கும் நிலையில், 130 சதுர கிலோ மீட்டர் நிலங்கள் வனப்பகுதியில் இருந்து எடுக்கப்படுகிறது. இதன்மூலம், ஏறத்தாழ 10 லட்சம் மரங்கள் வெட்டப்படவிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, சுனாமிகள் மற்றும் நிலநடுக்கங்கள் ஏற்படும் பகுதிகளாக இப்பகுதி இருப்பதால், மிகப்பெரிய சூழலியல் சிக்கலுக்கு இத்திட்டம் வழிவகுக்கும் என சுற்றுசூழல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும் 2,000க்கு அதிகமான வகைகளைக் கொண்ட உயிரினங்கள் வாழும் பகுதியாக இப்பகுதி இருப்பதால், அந்த உயிரினங்களின் அழிவுக்கு வழிவகுக்கும், லெதர்பேக் கடல் ஆமைகள் போன்ற அபூர்வ உயிரினங்களின் வாழிடம் பாதிக்கப்படும், பவளப்பாறைகள் சேதமடையும் என்ற அச்சம் உள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல, இப்பகுதியில் மற்றும் நிக்கோபரேஸ் பழங்குடியின மக்களை இடம்பெயரச் செய்வது அவர்களைப் பாதிக்கும் என்றும், சூழலியல் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். இத்திட்டம் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் பங்கஜ் சேக்சாரியா என்ற சூழலியல் நிபுணர், இந்த தீவில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் சாம்பன் (Shompen) மற்றும் நிக்கோபார்ஸ் (Nicobarese) போன்ற பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின மக்களின் வாழ்விடங்கள் பறிக்கப்படும். இது அவர்களின் உடல்ரீதியான மற்றும் கலாச்சார ரீதியான அழிவுக்கு வழிவகுக்கும் என்று குறிப்பிடுவதுடன் இத்திட்டத்தை ஒரு பேரழிவு என விமர்சிக்கிறார்.
இந்தசூழலில் தான், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் தொலைநோக்குப் பார்வையின் கீழ் இயங்கும் 'டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் PURA' (கிராமப்புறங்களில் நகர்ப்புற வசதிகளை வழங்குதல்) என்ற அமைப்பு தி கிரேட் நிக்கோபர் திட்டத்திற்கு எதிராக ஒரு ஆன்லைன் மனுவைத் தொடங்கியுள்ளது. இந்த மனுவில், மத்தியரசு கொண்டுவந்துள்ள இந்த திட்டம் சுற்றுச்சூழல் மற்றும் பழங்குடியினருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது எனவும் மிகப்பெரிய காடழிப்பை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கிறது. இதுவரை இந்த மனுவில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கையெழுத்திட்டிருக்கின்றனர். இதையடுத்து, இந்த மனுவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, தேசிய வனவிலங்கு வாரியம் ஆகியோருக்கு அனுப்பியிருக்கிறது. இவ்வாறு, அந்தமான் நிக்கோபரில் மத்தியரசு மேற்கொண்டுள்ள "தி கிரேட் நிக்கோபர் திட்டம்" பல்வேறு எதிர்ப்புகளை பெற்றிருக்கிறது.