கடந்த 22-ம் தேதி அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே வார்த்தை மோதல் அதிகரித்து வருகிறது. இரண்டு நாட்டின் அரசுகளும் எதிரெதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தவகையில், மத உணர்வைத் தூண்டும் வகையில், தவறான தகவல்களை பரப்புவதாக மொத்தம் 63 மில்லியன் சந்தாதாரர்களை கொண்ட 16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்தநிலையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் இந்தியாவிற்கு எதிராகவும் கருத்து தெரிவித்ததாக கூறி, அசாம், மேகாலயா , திரிபுரா மாநிலங்களை சேர்ந்த 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அசாம் முதலமைச்சர் தெரிவிக்கையில், “தேவைப்பட்டால் கைது செய்யப்பட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். அனைத்து சமூக ஊடக பதிவுகளையும் ஆய்வு செய்து வருகிறோம். நாட்டு நலனுக்கு எதிராக கருத்து தெரிவித்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இதன்படி, இந்தியாவிற்கு எதிராக கருத்து தெரிவித்ததாக திரிபுராவை சேர்ந்த ஓய்வுப்பெற்ற 2 ஆசிரியர்கள் உட்பட 4 பேர் , மேகாலயாவைச் சேர்ந்த ஒருவரும்,
பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முகநூலில் பதிவிட்டதாக பத்திரிக்கையாளர் ஒருவர், கல்லூரி மாணவர் வழக்கறிஞர் உட்பட 6 பேரும், இந்தியாவிற்கு எதிராக கருத்து தெரிவித்ததாக அசாமை சேர்ந்த 7 பேரும் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், அசாமை சேர்ந்த இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் எம்எம்ஏ அமினுள் இஸ்லாம், தேசத்துரோக சட்டத்தின் கீழ் கடந்த வியாழன் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இவர், 2019 ஆம் ஆண்டு காஷ்மீரில் நடந்த புல்வாமா தாக்குதல், மற்றும் தற்போது நடந்திருக்கும் பஹல்காம் தாக்குதல் போன்றவை அரசின் சதி வேலை என கூறியதை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார்.
4 நாட்கள் காவல்துறையின் காவலில் வைக்கப்பட்ட அவர் பின்பு விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.