பப்ஜி விளையாடி பெற்றோரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.10 லட்சத்தை எடுத்த சிறுவனை பெற்றோர் கண்டித்ததால் அவர் விட்டை விட்டு வெளியேறினார்.
மும்பை ஜோகேஸ்வரி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன், கடந்த மாதம் முதல் செல்போனில் தடை செய்யப்பட்ட பப்ஜி கேம் விளையாடி வந்துள்ளார். இந்த விளையாட்டிற்காக சிறுவன் தனது பெற்றோரின் வங்கிக் கணக்கில் இருந்து ஆன்லைன் மூலமாக ரூ.10 லட்சத்தை எடுத்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த சிறுவனின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் சிறுவன் வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது அந்தேரி கிழக்கு மகாகாளி குகை அருகே சிறுவன் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் அங்கு சென்று சிறுவனை மீட்டனர். பின்னர் சிறுவனுக்கு கவுன்சிலிங் கொடுத்து பெற்றோரிடம் ஒப்படைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.