[X] Close

தலிபான்களுக்கே தலைவலி கொடுக்கும் பயங்கரவாத அமைப்பு: யார் இந்த ISKP? - முழுமையான ரிப்போர்ட்

சிறப்புக் களம்

Terrorist-organization-screaming-at-the-Taliban--Who-is-this-ISKP----Complete-report

தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய 11 நாட்களிலேயே காபூல் நகரில் ஐஎஸ்கேபி (ISKP) அமைப்பானது தனது மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தற்கொலைப்படை குண்டுவெடிப்பு தாக்குதலில் 19 அமெரிக்க வீரர்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎல்-கோரசன் அல்லது ஐஎஸ்ஐஎல்-கே என்று அழைக்கப்படும் இஸ்லாமிக் ஸ்டேட் கோரசன் ப்ரோவின்ஸ் (ISKP) அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.


Advertisement

யார் இந்த ஐஎஸ்கேபி?

கோரசன் என்பது ஒரு காலத்தில் ஆப்கானிஸ்தான், ஈரான், பாகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஒரு பழங்கால கலிபாவின் கீழ் உள்ள ஒரு வரலாற்றுப் பகுதி. மறைந்த ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதிக்கு நெருக்கமான ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த போராளிகள் மற்றும் பாகிஸ்தானிய தலிபான் அமைப்பிலிருந்து பிரிந்த போராளிகளால் இந்த ஆயுதக் குழு 2014 -15 இல் உருவாக்கப்பட்டது.


Advertisement

image

2015 ஆம் ஆண்டு ஐஎஸ் அமைப்பு, கோராசன் மாகாணம் அமைப்பு பற்றி அறிவித்தப் பிறகு, ஆப்கானிஸ்தானில் ஜிஹாதிகளை ஆட்சேர்ப்பு செய்வதை நிறுத்துமாறு ஐஎஸ் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதிக்கு தலிபானின் அப்போதைய அரசியல் குழுத் தலைவர் முல்லா அக்தர் மன்சூர் கடிதம் எழுதினார். ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய ஆட்சியை மீண்டும் நிறுவும் போராட்டத்தில் "ஒரே ஒரு கொடி மற்றும் ஒரு தலைமைக்கு" மட்டுமே இடம் உள்ளது என்று அவர் அக்கடிதத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் ஐஎஸ்கேபி, அதிருப்தியடைந்த தலிபான் போராளிகளை ஆட்சேர்ப்பு செய்வதை நிறுத்தவில்லை. ஆப்கானிஸ்தான் முழுவதும் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதையும் அது நிறுத்தவில்லை. இந்த புள்ளியிலிருந்தே ஐஎஸ்கேபிக்கும் தலிபான்களுக்குமான முரண்பாடு தொடங்கிவிட்டது.

எங்கே இயங்குகிறது இந்த ஐஎஸ்கேபி?


Advertisement

ஐஎஸ்கேபி அமைப்பு வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் வலுவான வேர்களைக் கொண்டுள்ளது, காபூல் மற்றும் பிற மாகாணங்களில் தங்களின் ஸ்லீப்பர் செல்களை வைத்துள்ளது. இந்த அமைப்பு கடந்த ஆறு ஆண்டுகளில், நங்கர்ஹார் மாகாணத்தில் இருந்து ஆப்கானிஸ்தான் முழுவதும் ஒரு நிறுவன வலையமைப்பை உருவாக்கி, தெற்கு, மேற்கு மற்றும் மத்திய ஆசியா முழுவதிலுமிருந்து பலரை அமைப்பில் இணைத்தது.

image

தொடக்கத்தில் தெஹ்ரிக்--தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) தளபதி ஹபீஸ் சயீத் கானை ஐஎஸ்கேபியின் தலைவராகவும், முன்னாள் ஆப்கானிஸ்தான் தலிபான் தளபதி அப்துல் ரவூப் அலிசாவை ஐஎஸ்கேபியின் துணைத் தலைவராகவும்  செயல்பட்டு (இருவரும் அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டனர்). லஷ்கர்--தொய்பா, ஜமாத்-உத்-தவா, ஹக்கானி நெட்வொர்க் மற்றும் உஸ்பெகிஸ்தானின் இஸ்லாமிய இயக்கம் போன்ற பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின் உறுப்பினர்களை ஐஎஸ்கேபி அமைப்பில் இணைத்தனர் என்று அமெரிக்காவை தளமாகக் கொண்ட போர் தீவிரவாத மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 2020 ல் கோரசானி கைது செய்யப்பட்டதில் இருந்து ஷஹாப் அல் முஹாஜிர் ஐஎஸ்கேபி அமைப்பை வழிநடத்தி வருகிறார்.

ஐஎஸ்கேபியின் கொள்கை என்ன?

ISKP அமைப்பு செயல்பாட்டு தந்திரங்கள் மற்றும் சித்தாந்தத்தில், தனது தாய் அமைப்பான ஐஎஸ் அமைப்பை பின்பற்றுவதாக அறிவித்துள்ளது.  "இஸ்லாமிய ஆட்சியை கோரசன் மாகாணத்தில் நிறுவுவதே எங்களின் முக்கிய குறிக்கோள், அதற்காக  "ஜிஹாத்" செய்ய தயாராக உள்ளோம். சர்வ வல்லமையுள்ள அல்லா நீண்ட காலத்திற்கு முன்பே கோரசன் தேசத்தில் எங்களை ஜிஹாத் செய்ய ஆசீர்வதித்தார் என்பதில் சந்தேகமில்லை, அல்லாவின் ஆசியினால்தான் நாங்கள் கோரசன் தேசத்திற்குள் நுழைந்த எந்த அவிசுவாசியையும் எதிர்த்துப் போராடுகிறோம். இவை அனைத்தும் ரியத்தை நிறுவுவதற்காகவேஎன்று ஐஎஸ்கேபி அமைப்பு 2015 இல் வெளியிட்ட ஒரு வீடியோ செய்தியில் கூறியது.

image

2015 மற்றும் 2016 இல் ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ் அமைப்பிற்கான அழுத்தம் அதிகமானபோது, அந்த அமைப்பு ஆப்கானிஸ்தானின் பக்கம் தனது கவனத்தை திருப்பியது. ஆப்கானிஸ்தானில் இருந்து ஐஎஸ் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப ஐஎஸ்கேபி மூலம் பிரச்சார செய்திகளை வெளியிட்டது, ஆசியா முழுவதும் உள்ள முஸ்லீம் இளைஞர்களை அமைப்பில் சேருமாறும் அழைப்பு விடுத்தது. இதனால் இந்தியாவில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் உட்பட பல இளைஞர்கள் ஆப்கானிஸ்தானுக்கு ஐஎஸ் அமைப்பில் இணைந்தனர்.

ஐஎஸ்கேபின் கொடூர முகம்:

மிகக் கடுமையான கொள்கைகள் கொண்ட ஐஎஸ்கேபி அமைப்பினர் தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்து ஈராக் மற்றும் சிரியாவுக்குச் சென்று ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக தாக்குதல்களில் ஈடுபட்டனர், மேற்கத்திய நாடுகள் மீதான சதித் தாக்குதல்களிலும் இவர்களின் பங்களிப்பு உள்ளது.

ஐஎஸ்கேபி தலைவர்கள் பலரைக் கொன்று அமெரிக்கா பல தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஏப்ரல் 2017 இல், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஐஎஸ் குகைகளில் மிக சக்திவாய்ந்தஅனைத்து குண்டுகளுக்கும் தாய்எனப்படும்அணுசக்தி அல்லாத வெடிகுண்டை ஐஎஸ்கேபி அமைப்பு வைத்திருப்பதாக கூறினார். பல தாக்குதல்களுக்கு பின்பும் ஐஎஸ்கேபி தொடர்ந்து தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்தியே வந்தது. ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதி சட்டவிரோதமாக இருப்பதால், ஐஎஸ்கேபி வளர நிலைமைகள் சாதகமாக உள்ளன.

image

இந்த குழுவில் எத்தனை பேர் சேர்ந்துள்ளனர் என்பது பற்றிய தெளிவான கணக்கு இல்லை என்றாலும், சமீபத்திய ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் நடந்த பல மிக மோசமான தாக்குதல்களுக்கு ஐஎஸ்கேபி பொறுப்பேற்றுள்ளது, மசூதிகள், பொது இடங்கள், பெண்கள் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் கூட இவர்கள் தாக்குதல் நடத்தி மக்களை கொன்றனர். மே 2020 இல் காபூலில் உள்ள மகப்பேறு வார்டில் நடந்த கொடூரமான தாக்குதலில் செவிலியர்கள், பெண்கள் மற்றும் கைக்குழந்தைகள் உட்பட 24 பேரை இந்த அமைப்பு கொன்றது குறிப்பிடத்தக்கது.

ஐஎஸ்கேபி - தலிபான்கள் போட்டி:

ஆப்கானிஸ்தானில் மற்றொரு அமைப்பு உருவாவதை தலிபான்கள் விரும்பவில்லை. தலிபான்கள் ட்ரைபல் சிந்தனை மற்றும் தேசியவாத எண்ணம் கொண்ட அமைப்பாகும். அதேசமயம் ஐஎஸ்கேபி தேசிய எல்லைகளை நம்பவில்லை, உலகளாவிய இஸ்லாமிய கலிபாவை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையை உடையது.

“எங்களின் தலைமை சுதந்திரமானது, எங்களின் குறிக்கோள்கள் சுயாதீனமானவை. எங்களிடம் உலகளாவிய நிகழ்ச்சி நிரல் உள்ளது, எனவே இஸ்லாத்தையும், முழு இஸ்லாமிய சமூகத்தையும் யார் பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்று மக்கள் கேட்கும்போது, நிச்சயமாக நாங்கள் மிகவும் கவர்ச்சிகரமானவர்கள்." என்று ஐஎஸ்கேபியின் தலைவராக இருந்த ஒமர் கோரசனி இந்த மாத தொடக்கத்தில் கூறினார்.

image

தற்போது தலிபான்களுடன் ஐஎஸ்கேபி அமைப்புக்கு உருவான முரண்பாடு என்பது அமெரிக்காவிற்கும் தலிபான்களுக்கும் இடையிலான ஒப்பந்தம் ஆகும். அல்-காய்தா மற்றும் ஐஎஸ் போன்ற பயங்கரவாதக் குழுக்கள் ஆப்கானிஸ்தான் மண்ணைப் பயன்படுத்த அனுமதிக்காது என்பது அமெரிக்க-தலிபான் ஒப்பந்தத்தின் முக்கிய விதிமுறைகளில் ஒன்றாகும். இந்த ஒப்பந்தமே ஐஎஸ்கேபிக்கு அனலை கிளப்பியுள்ளது. கொள்கை மற்றும் செயல்பாட்டு வேறுபாடுகள் ஐஎஸ்கேபி மற்றும் தலிபான்களுக்கு இடையே வெளிப்படையான மோதல்களுக்கு வழிவகுத்துள்ளது.

ஐஎஸ்கேபி – தலிபான்களுக்கு தொடர்பா?

மற்றொரு பக்கம், ஐஎஸ்கேபி மற்றும் தலிபான்களுக்கு இடையே ஹக்கானி நெட்வொர்க் வழியாக தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஐஎஸ்கேபிக்கும் ஹக்கானி நெட்வொர்க்கிற்கும் இடையே வலுவான தொடர்புகள் உள்ளன, இந்த ஹக்கானி நெட்வொர்க் தலிபான்களுடன் நெருக்கமாக உள்ளது. காபூலில் இப்போது பாதுகாப்புப் பொறுப்பில் உள்ளவர் கலீல் ஹக்கானி ஆவார் என்று கூறுகிறார் ஆசியா பசிபிக் அறக்கட்டளையைச் சேர்ந்த ஆப்கானிஸ்தானில் உள்ள தீவிரவாத நெட்வொர்க்குகளை கண்காணித்து வரும் டாக்டர் சஜ்ஜன் கோஹல். இவர் பேசும்போது, "2019 மற்றும் 2021 க்கு இடையில் பல பெரிய தாக்குதல்களில் ஐஎஸ்கேபி, தலிபான்களின் ஹக்கானி நெட்வொர்க் மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பிற பயங்கரவாத குழுக்களுக்கு இடையே ஒத்துழைப்பு இருந்தது" என்று கூறுகிறார். ஆகஸ்ட் 15 அன்று காபூலில் தலிபான்கள் நாட்டை கைப்பற்றியபிறகு, ஐஎஸ்கேபி மற்றும் அல்-காய்தா தீவிரவாதிகள் உட்பட புல்--சார்கி சிறையில் இருந்து ஏராளமான கைதிகளை தலிபான் அமைப்பு விடுவித்தது. தற்போது தலிபான்கள் காபூல் குண்டுவெடிப்பைக் கண்டித்ததுடன், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதாகவும் உறுதியளித்துள்ளனர். தற்போதைய காபூல் குண்டுவெடிப்பு ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதற்கான எச்சரிக்கை மணி.

தலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆளத் தயாராகவுள்ள இந்த சூழலில், ஐஎஸ்கேபி அமைப்பு ஆப்கனின் புதிய தலிபானாக இருக்க விரும்புகிறது என்பதே இந்த குண்டுவெடிப்பு உலகுக்கு சொல்லும் செய்தியா?????.

 


Advertisement

Advertisement
[X] Close