2026 நீட் வினாத்தாள் கசிவு வழக்கில், மகாராஷ்டிரா-ராஜஸ்தான் பயிற்சி மைய உரிமையாளர்கள், வேதியியல் பேராசிரியர் உட்பட 10 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு ஜூன் 21 அன்று மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. லத்தூரைச் சேர்ந்த ரேணுகாய் வேதியியல் மைய நிறுவனர் சிவராஜ் மோட்டேகாங்கர் மீது விசாரணை தீவிரமாகிறது.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள 2026 நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த பயிற்சி மைய உரிமையாளர்கள், வேதியியல் பேராசிரியர் உட்பட 10 பேரை சிபிஐ (CBI) அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கசிவு விவகாரம் காரணமாக, மே 3-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுதேர்வு ஜூன் 21-ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்ளில் மிக முக்கியமாக கவனம் பெறுபவர் மகாராஷ்டிர மாநிலம் லத்தூரைச் சேர்ந்த ரேணுகாய் வேதியியல் பயிற்சி மையத்தின் நிறுவனர் சிவராஜ் ரகுநாத் மோட்டேகாங்கர் ஆவார். இவரை சிபிஐ கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது.
சிவராஜ் மோட்டேகான்கர் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பகுதிநேர ஆசிரியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார் என்று கூறப்படுகிறது. 1999-2000 காலகட்டத்தில், லத்தூரில் உள்ள ஒரு சிறிய கடையில், வெறும் 10 மாணவர்களைக் கொண்டு அவர் 'RCC Classes'-ஐத் தொடங்கினார்.
காலப்போக்கில், இந்த நிறுவனம் மிக வேகமாக விரிவடைந்து. தற்போது லத்தூர், நாந்தேட், சத்ரபதி சம்பாஜிநகர், புனே, அகோலா, நாசிக் மற்றும் சோலாப்பூர் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் இது செயல்பட்டு வருகிறது.
உள்ளூர் மதிப்பீடுகளின்படி, இந்தப் பயிற்சி நிறுவனத்தின் சொத்து மதிப்பு தற்போது சுமார் 1,500 கோடி ரூபாயாக இருக்கும் என்று கருதப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும், 40,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த நிறுவனத்துடன் இணைந்து பயின்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் லத்தூர் அருகே கோபேகான் ஷிவார் பகுதியில் 8 ஏக்கர் நிலத்தில் இவர் பள்ளி, கல்லூரி கட்டி வருவது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த நிலத்தில் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட பல அடுக்குக் கட்டிடம் உருவாகி வருவதும் அதன் கட்டுமானப் பணிகள் ஏறக்குறைய நிறைவடையும் நிலையில் இருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது மோட்டேகான்கரின் வருமான ஆதாரம் மற்றும் நிதி ஆதாரங்கள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளதால் இது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
மேலும் NEET 2025 தேர்வில், இவரின் ரேணுகாய் வேதியியல் பயிற்சி மையத்தின், 19 மாணவர்கள் நாடு முழுவதும் உள்ள AIIMS நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
இவர்களில், இரண்டு மாணவர்கள் AIIMS டெல்லிக்கும், ஐந்து மாணவர்கள் AIIMS ஹைதராபாத்திற்கும், தலா மூன்று மாணவர்கள் AIIMS போபால் மற்றும் AIIMS வாரணாசிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும், AIIMS நாக்பூர், தியோகர், கோரக்பூர், ராஜ்கோட், ராய்பூர் மற்றும் மங்களகிரி ஆகிய நிறுவனங்களில் தலா ஒரு மாணவர் சேர்க்கை பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து தனிநபர் வழிகாட்டுதல் (one-on-one mentoring) திட்டங்கள் என்ற போர்வையில், மாணவர்களுக்குத் தேர்வு வினாத்தாள்கள் கசிந்து வழங்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.