19 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட 'வந்தே மாதரம்' பாடல் 150 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. பாடல் உருவாகி 150 ஆண்டுகளானதை கொண்டாடும் விதமாக மத்திய அரசு ஓராண்டு கொண்டாட்டத்தை அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, கடந்த நவம்பர் மாதம் 7 ஆம் தேதி ”வந்தே மாதரம்” பாடலின் ஓராண்டு விழாக் கொண்டாட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அந்த நிகழ்வில் நினைவாக அஞ்சல் தலையையும், நாணயத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், ”வந்தே மாதரம்” பாடலின் 150-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக - நடைபெற்று வரும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் - 8வது நாளான இன்று வந்தே மாதரம் பாடல் குறித்து 10 மணி நேர விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று மக்களவை கூடிய பின் வந்தே மாதரம் குறித்த விவாதம் தொடங்கியது. அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "வந்தே மாதரம் என்பது வெறும் அரசியல் வார்த்தை கிடையாது அது இந்தியர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வார்த்தை. வந்தே மாதரம் பாடல் ஆங்கிலேயர்கள் போட்டு வைத்த அத்தனை சங்கிலிகளையும் உடைத்தெறிந்தது" என உணர்ச்சி பொங்கப் பேசினார்.
ஒரு காலத்தில் தடை செய்யப்பட்டிருந்த வந்தே மாதரம் பாடல் தற்போது, 150 ஆண்டுகளை கடந்து தேசபக்திக்கான முக்கியப்பாடலாக இந்தியா முழுவதும் பாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், வந்தே மாரதம் பாடல் கடந்து வந்த பாதை என்ன என்பதை பார்க்கலாம்...
வந்தே மாதரம் என்றால் தாய்(நாட்டை) வணங்குகிறோம் என்று பொருள். இந்த பாடல் வங்காள கவிஞரான பங்கிம் சந்திர சட்டர்ஜி என்பவர் எழுதிய கவிதை தொகுப்பின் ஒரு பகுதி ஆகும். இந்த பாடல் எப்பொழுது எழுதப்பட்டது என சரியான ஆதாரம் கிடைக்கவில்லை. முதன்முதலாக 1875 ஆம் ஆண்டு வெளியான வங்கதர்ஷன் என்ற வங்க இதழில் இந்த பாடலின் வரிகள் வெளியிடப்பட்டிருந்தது. பின்னர், பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய 1882-ஆம் ஆண்டு வெளியான ‘ஆனந்த மடம்’ என்ற நாவலிலும் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது. இதனால், வந்தே மாதரம் பாடல் 1875 இல் பிறந்ததாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையிலேயே தற்போது, 150 ஆம் ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது.
1900-களின் துவக்கத்தில் காங்கிரஸ் அமைப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, காங்கிரஸ் கூட்டத் தொடரில் இந்தப் பாடல் பாடப்பட்டு வந்தது. அப்போது, விக்டோரியா மகாராணியை புகழ்ந்து பாடும் பாடல்களை மட்டுமே பாடவேண்டும் எனவும் சுதந்திர உணர்வை தூண்டும் வந்தே மாதரம் பாடலை இந்தியர்கள் யாரும் பாடக்கூடாதென ஆங்கிலேயர்கள் இப்பாடலுக்கு தடை விதித்திருந்தனர்.
இந்நிலையில், வந்தே மாதரம் என்னும் வரிகள் விடுதலை உணர்வுகளை இந்தியர்களிடையே விதைத்து, தேசிய பாடலாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டாலும், பல விமர்சனங்களை சந்தித்திருக்கிறது.
1950 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய நாட்டிற்க்கென தேசிய பாடல் உருவாக்கும் முயற்சியில் இருந்தபோது, வங்காள கவிஞர்களான பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய "வந்தே மாதரம்" பாடலும் இரவீந்திரநாத் தாகூர் எழுதிய "ஜன கன" பாடலும் அவற்றில் பட்டியலிடப்பட்டது. அப்பொழுது வந்தே மாதரம் பாடல் இந்து சமயத்தை எடுத்துரைக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. அதில் துர்க்கை அம்மனை போல் தன் தாய்நாட்டை பாவித்து பாதுகாக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்தியா என்பது சமத்துவ நாடு , இந்த பாடல் இந்து சமயத்தை பறைச்சாற்றும் விதமாக இருக்கிறது. இந்த பாடலை இந்திய தேசிய பாடலாக ஏற்றால் சமத்துவமின்மை நிலவும் என விவாதங்கள் எழுந்தன. இதனை ஏற்றுக்கொண்டு ராஜேந்திர பிரசாத் தலையிலான அரசியலமைப்பு சபை இரவீந்திரநாத் தாகூர் எழுதிய "ஜன கன" பாடல் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இப்படி பல விவாதங்களை வந்தே மாதரம் பாடல் சந்தித்திருந்தாலும் இந்தியர்களிடையே தாய்நாட்டை காக்க வேண்டும் என்ற விடுதலை உணர்வை விதைத்து இந்தியா சுதந்திரம் அடைந்ததில் பெரும்பங்கு வகித்திருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.