model image எக்ஸ் தளம்
இந்தியா

143 மருந்துகள் தரமற்றவை | மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் ஆய்வில் கண்டுபிடிப்பு

இரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளுக்காக உட்கொள்ளப்படும் 145 மருந்துகள் தரமற்றதாக இருந்ததை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளது.

Prakash J

நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மாத்திரை, மருந்துகளையும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வுசெய்து செய்கின்றன. அதன்படி, கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், சளி, கிருமித் தொற்று, இரத்த அழுத்தம், இருமல், சர்க்கரை நோய், ஜீரண மண்டல பாதிப்பு, வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 145 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது.

அதில், க்ளென்மார்க் மருந்து நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பரவலாக பரிந்துரைக்கப்படும் உயர் இரத்த அழுத்த மருந்தான டெல்மா ஏஎம், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பால் (CDSCO) தரமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

model image

இந்திய மருந்தகவியல் (IP) நிர்ணயித்த தரநிலைகளை இந்த மருந்து பூர்த்தி செய்யத் தவறியதைத் தொடர்ந்து, தரமற்றவை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க பரவலாகப் பயன்படுத்தப்படும் இந்த மருந்து, இந்திய பெரியவர்களில் சுமார் 30 சதவீதத்தை பாதிக்கிறது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது. உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால், அது மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவை தவிர, நுண்ணுயிர் எதிர்ப்பிகளில் செஃபுராக்ஸைம் ஆக்செட்டில் மாத்திரைகள் ஐபி 500 மி.கி மற்றும் செஃபிக்ஸைம் & ஆஃப்லோக்சசின் மாத்திரைகள் ஆகியவையும் அடங்கும். டைக்ளோஃபெனாக் சோடியம் இன்ஜெக்ஷன் ஐபி (DEPAIN-75) மற்றும் டிராமடோல் ஹைட்ரோகுளோரைடு இன்ஜெக்ஷன் 50 மி.கி/மி.லி (டிராமகோப்) போன்ற வலி நிவாரணிகளும் தர சோதனைகளில் தோல்வியடைந்தன. குமட்டல் மற்றும் வாந்திக்கு பயன்படுத்தப்படும் மெட்டோகுளோபிரமைடு ஊசி பிபி மற்றும் அமில ரிஃப்ளக்ஸுக்கு பரிந்துரைக்கப்படும் ரபேபிரசோல் சோடியம் ஊசி ஐபி ஆகியவை தரமற்றதாகக் கண்டறியப்பட்டுள்ளன. இரத்தக் கட்டிகளைத் தடுக்கும் டைகாக்ரெலர் மாத்திரைகள் ஐபி 90 மி.கி (டைகாமன் 90), உயர் இரத்த அழுத்தத்திற்குப் பயன்படுத்தப்படும் லோசார்டன் மாத்திரைகள் ஐபி 50 மி.கி போன்ற இருதய மருந்துகளும் சோதனையில் தோல்வியடைந்தன.

மருந்துகள்

NSQ பட்டியலில் உள்ள சுவாச மற்றும் சளி மருந்துகளில் அம்ப்ராக்ஸால் ஹைட்ரோகுளோரைடு, லெவோசல்புட்டமால் சல்பேட் & குய்ஃபெனெசின் சொட்டுகள் (ப்ரீத்-எல்எஸ் சொட்டுகள்), மற்றும் அம்ப்ராக்ஸால் ஹைட்ரோகுளோரைடு, குய்ஃபெனெசின், டெர்புடலின் சல்பேட் & மெந்தால் சிரப் (BRONKOREX AM சிரப்) ஆகியவை அடங்கும். NSQ பட்டியலில் பரவலாக பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் இருப்பது இந்திய மருந்துத் துறையில் தரக் கட்டுப்பாடு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது. அந்த மருந்துகளில் பெரும்பாலானவை இமாச்சல பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவையாக இருந்தன. அதன் விவரங்கள், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் cdsco.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அந்த விவரங்களை அறிந்து கொண்டு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.