ஒடிசா தீ விபத்து Pt web
இந்தியா

ஒடிசா | அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழப்பு.. 25 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!

ஒடிசாவின் கட்டாக் நகரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Premkumar S

ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் செயல்பட்டு வரும் எஸ்.சி.பி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, அப்பிரிவில் நோயாளிகள் உட்பட 23 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் தான், இத் தீ விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துக்கு சரியான காரணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை எனினும், மின் கசிவு காரணமாக தீ பரவியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி

முன்னதாக, சம்பவ இடத்தை பார்வையிட்ட ஒடிசா முதல்வர் மோகன் மோகன் சரண் மாஜி, தீ விபத்து தொடர்பான தகவலையடுத்து, தீயணைப்பு வீரர்கள் வேகமாக தீயணைப்பு நடவடிக்கைகளிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். ஆனால், ஏற்கனவே உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த தீ விபத்தில் 10 பேர் காயமடைந்திருக்கும் நிலையில், அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒடிசா தீ விபத்து

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில், ”ஒடிசாவின் கட்டாக் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் நிகழ்ந்த துரதிர்ஷ்டவசமான விபத்து மிகவும் வேதனை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். உயிரிழந்துள்ளவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PMNRF) ₹2 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ₹50,000 வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.