முப்பதாண்டுகளுக்கு முன்னர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நபருக்கு அவரது 104-வது வயதில் உச்ச தீதிமன்றம் இடைக்காலப் பிணை வழங்கி உள்ளது.
ரசிக் சந்திர மண்டல் என்பவருக்கும், அவரது சகோதரர் சுரேஷ் மண்டல் என்பவருக்கும் பல ஆண்டுகளுக்கு முன்னர் நிலம் தொடர்பாக மோதல் இருந்து வந்தாக தெரிகிறது. இதனால், நவம்பர் 1988-ல் சுரேஷ் தனது வீட்டிலேயே அடையாளம் தெரியாத நபரால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து, சுரேஷின் மனைவி அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் ரசிக் உள்ளிட்ட கிராம மக்கள் சிலரை கைது செய்தனர். கைது செய்யப்படும்போது ரசிக்குக்கு வயது 68. பின்னர், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த சூழலில், ரசிக் மற்றும் ஜிதேன்தான் குற்றவாளிகள் என நிரூபணமானதால், 1994ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதன் பின்னர் ரசிக் மற்றும் ஜிதேனுக்கும் பிணை கிடைத்துள்ளது. பிணை கிடைத்து வீட்டு திரும்பிய பின்னர், சிறைக்கு செல்வதற்கு முன்பே ஜிதேன் மரணமடைந்துள்ளார்.
இதனையடுத்து, மீண்டும் சிறைக்கு சென்றார் ரசிக். தண்டனையை எதிர்த்து 2018ஆம் ஆண்டு கொல்கத்தா உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் அடுத்தடுத்து மேல்முறையீட்டு மனுக்களை ரசிக் தாக்கல் செய்ய, அம்மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், அவர் மீண்டும் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 29) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு அந்த மனு மீது விசாரணை நடத்திய பின்னர் ரசிக் சந்திராவை இடைக்கால பிணையில் விடுவிக்க உத்தரவிட்டது. மேலும், விசாரணை நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளின் அடிப்படையில் அந்தப் பிணை வழங்கப்படுவதாக அமர்வு நீதிபதிகள் குறிப்பிட்டனர். இதனையடுத்து, சிறையிலிருந்து வெளியே வந்த ரசிக் தனது மகன் உத்தமின் கையை பிடித்தபடி நலம் விசாரித்தார்.
பின்னர் ரசிக் கூறுகையில், “நான் வீட்டிற்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.. ஆனால், சிறை வாழ்க்கையை விட்டு வருவது எனக்கு வருத்தமளிக்கிறது. I miss jail. அங்கு இருப்பவர்கள் எனது குடும்பத்தை போன்றவர்கள்” என்று தெரிவித்துள்ளார்.