‘சாமியேய்ய்ய் சரணம் ஐயப்பா...’ - புல்லு மேடு, கானக பாதை இன்று முதல் மீண்டும் திறப்பு!
செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்
கேரளாவில் பெய்து வரும் கன மழையை தொடர்ந்து ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பு கருதி இடுக்கி வண்டிப்பெரியாறு அருகே, சத்திரம் - புல்லு மேடு வழி சபரிமலை செல்லும் பாரம்பரிய கானக பாதை, இடுக்கி ஆட்சியர் விக்னேஷ்வரி உத்தரவுப்படி கடந்த திங்கட்கிழமை (02.12.24) தற்காலிகமாக மூடப்பட்டது. கனமழையை தொடர்ந்து கடும் பனி மூட்டமும் நிலவுவதால், வன விலங்குகள் உலவுவதை காண முடியாத சூழல் ஏற்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், மழை குறைந்து இயல்பான வானிலை நிலவுவதாக தேக்கடி பெரியாறு புலிகள் காப்பக வனத்துறையினர் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இதையடுத்து, இடுக்கி ஆட்சியர் விக்னேஷ்வரி உத்தரவுப்படி சத்திரம் - புல்லு மேடு வழி சபரிமலை செல்லும் பாரம்பரிய கானக பாதை, இன்று (04.12.24) காலை முதல் மீண்டும் திறக்கப்பட்டது.
இன்று காலை 7 மணி முதல் பாரம்பரிய கானக பாதை வழியாக ஐயப்ப பக்தர்கள் 12 கிலோ மீட்டர் தூரம் உள்ள சபரிமலைக்கு பாத யாத்திரையாக சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து மதியம் 2 மணி வரை மட்டுமே கானக பாதையில் பக்தர்கள் சபரிமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.