கேரளா மலப்புரம் மாவட்டத்தில் போதைப்பொருள பயன்படுத்தும் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட 10 பேருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் சமீபகாலமாக இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாகவும், அதற்கு அவர்கள் அடிமையாகி வருவதாகவும் அதிர்ச்சிகர தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை தடுப்பதற்காக கேரளா முழுவதும் தனிப்படை அமைத்து போதைப்பொருள் தடுப்புத் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அப்படி நடத்தப்பட்ட சோதனையில், மலப்புரம் மாவட்டம் வளாஞ்சேரி பகுதியில் இருக்கும் ஒரு வாலிபருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது தெரியவந்துள்ளது. இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த இளைஞர் போதை ஊசி பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இவருக்கு சம்பந்தப்பட்ட நபர்களை பிடித்து பரிசோதனை செய்ததில், மேலும், 9 பேருக்கு எய்ட்ஸ் பரவியது தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட அனைவரும் ஒரே சிரிஞ்சை பயன்படுத்தியது தெரியவந்தது. தற்போது 10 பேரும் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
கேரள மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் (KSACS) கூற்றுப்படி, கேரளாவில் மாதந்தோறும் சராசரியாக 130 முதல் 140 புதிய எச்.ஐ.வி. தொற்று நோயாளிகள் பதிவாகின்றனர். புதிதாக கண்டறியப்படும் எச்.ஐ.வி. தொற்று நோயாளிகளில் 18-25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பது கண்டறியப்பட்டது. போதைப்பொருள் துஷ்பிரயோகம் முக்கிய காரணமாகத் தெரிகிறது. மாநிலத்தில் எச்.ஐ.வி.க்கு சிகிச்சை பெற்று வரும் மொத்த நபர்கள் சுமார் 17,000 பேர்.