stock market reuters
இந்தியா

ஒரு மணி நேர வர்த்தகம்! தீபாவளி ஸ்பெஷல்! பணம் பெருகுமா? பங்குச் சந்தையில் என்ன நடக்கும்?

சுப நேரத்தில் பங்குகளை வாங்கினால் ஆண்டு முழுவதும் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையும் முதலீட்டாளர்களிடம் உள்ளது. அப்படி என்ன சிறப்பு இந்த முகூர்த்த வர்த்தகத்தில்? சுப நேரத்தில் பங்குகளை வாங்கினால் உண்மையிலேயே லாபம் கிடைக்குமா? பார்க்கலாம்.

PT WEB

செய்தியாளர் - ராஜ்குமார். ர

தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு, இனிப்புகள் எனக் கொண்டாட்டங்கள் களைகட்டும். ஆனால், பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு தீபாவளி என்றாலே நினைவுக்கு வருவது 'Muhurat Trading' தான்! அந்த நேரத்தில் பங்குகளை வாங்கினால் ஆண்டு முழுவதும் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையும் முதலீட்டாளர்களிடம் உள்ளது.

இந்தியப் பங்குச் சந்தையில் நீண்டகாலமாகப் பின்பற்றப்படும் பாரம்பரியங்களில் ஒன்றாக முகூர்த்த வர்த்தகம் இருந்து வருகிறது. மும்பை பங்குச் சந்தையான BSE-யில் 1957ஆம் ஆண்டு இந்த நடைமுறை தொடங்கியது. பின்னர், தேசியப் பங்குச் சந்தையான NSE-யும் தனது செயல்பாடுகளின்போது இந்தப் பாரம்பரியத்தைப் பின்பற்றத் தொடங்கியது. இந்து நாட்காட்டியின்படி புதிய ஆண்டு எனக் கருதப்படும் 'சம்வத்' தொடங்குவதைக் குறிக்கும் வகையில், தீபாவளியன்று இந்தச் சிறப்பு வர்த்தகம் நடைபெறுகிறது.

stock market

பொதுவாக, தீபாவளி நாளில் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். இருப்பினும், அன்றைய தினம் குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்கு மட்டும் NSE மற்றும் BSE ஆகிய பங்குச் சந்தைகள் சிறப்பு வர்த்தக அமர்வை நடத்துகின்றன. இந்த நேரத்தில் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கவும் விற்கவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு 2026ஆம் ஆண்டுக்கான முகூர்த்த வர்த்தகம் நவம்பர் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. NSE மற்றும் BSE வெளியிட்டுள்ள அறிவிப்புகளின்படி, பிற்பகல் 2.20 மணி முதல் 3.30 மணி வரை வழக்கமான பங்கு வர்த்தகம் நடைபெறும். இதற்கு முன்னதாக பிற்பகல் 2.05 மணி முதல் 2.20 மணி வரை முன் வர்த்தகம் நடைபெறும்.

அப்படியானால், முகூர்த்த வர்த்தகத்தின்போது பங்குகளை வாங்கினால் உண்மையிலேயே லாபம் கிடைக்குமா என்ற கேள்வி பலருக்கும் எழலாம். சுப நேரத்தில் முதலீடு செய்வது பாரம்பரிய நம்பிக்கையின் அடிப்படையில் இருந்தாலும், பங்குகளின் விலை உயர்வதற்கு நிறுவனத்தின் செயல்பாடு, நிதிநிலை, சந்தைச் சூழல், பொருளாதார மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் உள்ளன. எனவே, முகூர்த்த வர்த்தகத்தில் பங்கேற்பதால் மட்டுமே லாபம் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

NSE

முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், பங்குகளை வாங்குவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் செயல்பாடுகள், வருவாய், வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் அதில் உள்ள இடர்கள் குறித்து ஆய்வு செய்வதுதான். முதலீட்டின் நோக்கம், எவ்வளவு காலம் முதலீட்டைத் தொடர முடியும், இழப்புகளைத் தாங்கும் திறன் ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். சுப நேரத்தில் முதலீட்டைத் தொடங்குவது தனிப்பட்ட நம்பிக்கையாக இருக்கலாம். ஆனால், முதலீட்டில் நீண்டகால வளர்ச்சியைத் தீர்மானிப்பது சுப நேரம் மட்டுமல்ல; சரியான திட்டமிடல் என்பதை முதலீட்டாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.