இந்தியாவும் அமெரிக்காவும் வரி குறைப்பில் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், இந்தியா ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்தும் முடிவும் எடுத்துள்ளது. இதனால் இந்தியா-ரஷ்ய உறவுகள் சிக்கலாகும் அபாயம் உள்ளது. டிரம்ப் இந்தியாவை பணியவைத்ததில் வெற்றி கண்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
செய்தியாளர் - பிரவீன் ஜோஷ்வா
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதும் அமெரிக்காவுக்கே முன்னுரிமை என்ற கொள்கையை அறிவித்து பல்வேறு நாடுகளுக்கும் கூடுதல் வரிகளை விதித்தார். அதன்படி இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 50 சதவீத வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார்.
இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக இருந்த அமெரிக்காவின் இந்த கூடுதல் வரிவிதிப்பு இந்தியாவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஆடை, இறால், ஆபரண நகைகள் ஆகியவை ஏற்றுமதி செய்யப்படுவது கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் தடைகளை ஈடுசெய்ய இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன் ஒரு பகுதியாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டது வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையாக பார்க்கப்பட்டது.
இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்ப், தான் மோடியுடன் பேசியதாகவும், அதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு இந்தியா மீதான வரி 18 சதவீதம் குறைக்கப்படும் என்று தனது சமூகவலைத்தளத்தில் அறிவித்தார். அதோடு அமெரிக்காவிற்கு எதிரான தங்கள் வரிகளை பூஜ்ஜியமாகக் குறைக்க இந்தியா நடவடிக்கை எடுக்கும் என்றும் குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து டிரம்ப்பின் இந்த பதிவை அங்கீகரிக்கும் விதமாக இந்தியா மீதான வரிகளை குறைத்த டிரம்ப்புக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் அமெரிக்க பொருள்களுக்கு இறக்குமதி வரியை பூஜ்யமாக இந்தியா ஒப்புக்கொண்டது உண்மை என்றே பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் இந்த நடவடிக்கை மூலம் இனி அமெரிக்க பொருள்கள் எந்தவித வரியும் இன்றி இந்திய சந்தையில் இறக்குமதியாக வழி கிடைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பொருள்களின் விலை குறையும் என்றாலும், இது உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்ட நிலையில், இந்த ஒப்பந்தத்தின் விளைவாக அமெரிக்காவுக்கு அளித்துள்ள இந்த சலுகையை தங்களுக்கும் கொடுக்கவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தவும் இந்தியா உறுதியளித்ததாக டிரம்ப் கூறியுள்ளார். இதன் மூலம் இந்தியாவின் நீண்ட நாள் நட்பு சக்தியான ரஷ்யாவுடனான இந்திய உறவிலும் சிக்கல்கள் எழுந்துள்ளது. இதுவும் வரும் காலங்களில் இந்தியாவுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது. அதே நேரம் இந்தியா இந்த அளவு இறங்கி வந்துள்ள நிலையில், டிரம்ப் இந்தியாவை பணியவைப்பதில் வெற்றிகண்டுள்ளார் என்றே இந்த நிகழ்வுகள் உறுதிப்படுத்தியுள்ளது.