தமிழகத்தில் தற்போது ஸ்க்ரப் டைபஸ் என்ற நோய் பரவி வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருக்கிறது. இது தொடர்பாக மாவட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையையும் அனுப்பியுள்ளது.
ஸ்க்ரப் டைபஸ் என்றால் என்ன? இது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும்? என்பது குறித்து நமக்கு விளக்குகிறார் பொது நல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.
இது ஒருவகை ஒட்டுண்ணி கடியால் ஏற்படுகின்ற காய்ச்சல். இந்த காய்ச்சலை பரப்பும் பாக்டீரியாவின் பெயர் 'Orientia tsutsugamushi’. இதனை கண்டறிந்தவர் ஒரு ஜப்பானியவர் என்பதால் இந்த பெயரானது வைக்கப்பட்டுள்ளது.
இந்த தொற்று உலகளவில் அனைத்து பகுதிகளிலும் பரவலாக காணப்பாட்டாலும் கூட, tsutsugamushi என்ற முக்கோணப் பகுதியில்தான் அதிகம் ஏற்படுகிறது.
அதாவது மேற்கே ஜப்பான், தெற்கே ஆஸ்திரேலியா, கிழக்கே பாகிஸ்தான் - இது மூன்றையும் இணைக்கும் போது, ஒரு முக்கோணம் உண்டாகும். இந்த முக்கோணத்திற்குள் மட்டும் 100 கோடி மக்கள் இந்த குறிப்பிட்ட நோயால் அடிக்கடி தொற்றுக்குள்ளாகிறார்கள். இந்த முக்கோணத்திற்கு உள்ளேதான் தமிழ்நாடும் வருகிறது.
தொற்றுக்குள்ளான உண்ணிகள் மனிதர்களை கடிக்கும்போதுதான் மனிதர்களுக்கு பரவுகிறது. வேறுவழிகளில் மனிதர்களுக்கோ, மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கோ பரவுவதில்லை. எப்படி டெங்கு பாதிக்கப்பட்ட கொசு மனிதர்களை கடிப்பதால் ஏற்படுகிறதோ, அதேப்போலதான் இதுவும்.
தவிர, மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் உறையாடுவதாலோ, கட்டியணைப்பதாலோ தொடுதல், இருமல், தும்மல் போன்றவற்றாலோ பரவுவதில்லை.
மேலும், மனிதர்களுக்கு மட்டுமில்லை... பூனை, நாய், எலி போன்ற மனிதர்களிடம் நெருங்கி வாழும் உயிரினங்களும் பாக்டீரியா தொற்றை ஏற்படுத்துகிறது. செல்லப்பிராணிகளுக்கு இந்த தொற்று ஏற்பட்டாலும் கூட, மனிதர்களுக்கு பரவ வாய்ப்புள்ளது.
நமது செல்லப்பிராணிகளில் இந்த உண்ணிகள் இருந்தால் கூட அது மனிதர்களை கடிக்க வாய்ப்புள்ளது.
இப்படி இந்த உண்ணிகள் கடித்த 14 நாட்களில் காய்ச்சல், குளிர் நடுக்கம், உடல் சோர்வு, உடல் வழி, இரும்பல், உடல் முழுவதும் நெறிக்கட்டிக்கொள்ளுதல் போன்றவை ஏற்படும்.
இதனை நாம் கவனிக்காமல் விட்டுவிட்டாலே, இரண்டாவது வாரத்தில் நுரையீரல் தொற்று, நிமோனியா,முளைக்கு தொற்றுபரவி கோமா, பதற்றநிலை, திடீர் சுவாச செயலிழப்பு, கல்லீரலில் பாதிப்பு ஏற்படுத்தி மஞ்சள் காமாலை, மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும்.
கல்லீரல் , சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகள் செயலிழந்து, மரணமடையும் வாய்ப்பு 30 சதவீதம் வரை உள்ளது. இது பிரச்னைக்குரிய காய்ச்சல் என்பதை மக்கள் உணர வேண்டும்.
இந்த அறிகுறி இருப்பவர்களுக்கு உண்ணி கடித்த இடத்தில், சிகரெட்டை வைத்து சுட்டதுப்போல கருப்பு நிறத்தில் உலர்ந்து போன நீள்வட்ட புண் ஏற்படும். இதனை எஸ்கர் என்று கூறுவோம்.
இது உடலில், வேர்வை இருக்கும் இடத்தில் உண்டாகும். கழுத்து, அக்குல், தொப்புளுக்கு கீழேயும், பெண்களை பொருத்தவரை மார்பகங்களுக்கு கீழே உள்ள இடுக்குகளில் இருக்கலாம். இந்த புண்களில்தான், முதலில் உண்ணி கடித்து உடலினும் நுழைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோல, காய்ச்சலோடு சேர்த்து புண் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். இது பாக்டீரியா தொற்று என்பதால், பாக்டீரியா கொல்லிகளுக்கு நன்றாக கேட்கும். குறிப்பாக, Azithromycin, Doxycycline போன்ற மாத்திரைகளுக்கு நன்றாக கேட்கும்.
வீட்டிலேயே கால தாமதம் செய்யாமல், முறையாகவும், விரைவாகவும் மருத்துவரிடத்தில் சென்று கிசிச்சை செய்ய வேண்டும்.
குறிப்பாக வயது முதிர்ந்தோர், கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய் இருப்பவர்கள், ஊட்டசத்து குறைப்பாடு உடையவர்கள், இதய நோய், சிறுநீரக நோய், கல்லீரல் நோய் போன்ற இணை நோய் இருப்பவர்களுக்கு இது ஏற்பட்டால், பிரச்னையை ஏற்படுத்தும் என்பதால், உடனடி சிகிச்சை தேவை.
காலநிலை மாற்றம்.. ஒரே நேரத்தில் ஏற்படும் வெப்பம், ஈரப்பதம் போன்றவை நோயை பரப்பும் ஒட்டுண்ணிகள் செழித்து வாழ உதவுகிறது. இதனால், காலநிலை மாற்றத்தால் இவ்வகை தொற்று ஏற்பட்டு அதிகமாக காய்ச்சல் ஏற்படுகிறது.
தற்போது நித தொற்று தமிழ்நாட்டில், காஞ்சிபுரம், திருவள்ளூர்,செங்கல்பட்டு, சென்னை, திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் அதிகமாக கண்டறியப்படுகிறது.
உண்ணிகளிடமிருந்து கடிபடாமல் இருப்பதுதான் முதல் தற்காப்பு நடவடிக்கை.
தலையணை, படுக்கை விரிப்புகளை சரியாக சுத்தம் செய்ய வேண்டும்.
வீட்டை சுற்றி புதார்கள் மண்டி இருந்தால், அதனை சுத்தம் செய்ய வேண்டும். உண்ணிக்கொல்லி மருந்துகளை தெளிக்கலாம்.
மலையேற்றத்துக்கு செல்லும்போது கொசு விரட்டி, உண்ணி விரட்டி களிம்புகளை உடலில் தேய்த்து கொள்ள வேண்டும்.
தீவிர காய்ச்சல், அதீத தலைவலி, அதீத உடல் சோர்வு, எஸ்கர் என்ற புண் போன்றவை தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்படி விழிப்புணர்வுடன் இருந்தால் ஸ்கரப் டைபஸிலிருந்து நம்மை தற்காத்து கொள்ளலாம்”
என்கிறார் மருத்துவர்.