model image freepik
ஹெல்த்

கழிவறையில் அமர்ந்து ஸ்மார்ட்போன் பார்ப்பவரா? மருத்துவர்கள் எச்சரிக்கை!

கழிவறையில் இருக்கும்போதும் ஸ்மார்ட்போனை ஸ்க்ரால் செய்துகொண்டே ஏகாந்தமாகப் பொழுதைக் கழிப்பவரா நீங்கள்? அதைத் தொடரலாமா வேண்டாமா என்பதை இந்தச் செய்தித் தொகுப்பைப் பார்த்துவிட்டு முடிவு செய்யுங்கள்.

PT WEB

ஸ்மார்ட்ஃபோனை வைத்துக்கொண்டு கழிப்பறையில் நீண்ட நேரம் செலவிடுவது பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இப்போது மேற்கத்திய பாணியிலான கழிப்பறைகள் எல்லா இடங்களிலும் வந்துவிட்டன. இதில் சாவகாசமாக அமர்ந்துகொள்ள முடிகிறது. எனவே பலரும் காலைக்கடன் கழிக்கும் நேரத்தை தனிமையில் நிம்மதியாக ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துவதற்கான நேரமாகக் கருதுகின்றனர். ஆனால் மேற்கத்திய பாணியிலான கழிப்பிடத்தில் நீண்ட நேரம் அமர்ந்துகொண்டிருப்பது மூலநோயை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 2013 முதல் 2023 வரையிலான பத்து ஆண்டுகளில் புனேவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் குதம் மற்றும் மலக்குடல் சம்பந்தமான நோய்களுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 90% பேர் கழிப்பிடத்தில் அமர்ந்துகொண்டு ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது.

model image

இவர்களில் 27% பேர் 15 நிமிடங்களுக்கு மேல் கழிப்பிடத்தில் செலவிட்டுள்ளனர். அதிகபட்சம் பத்து நிமிடங்களுக்கு மேல் கழிப்பிடத்தில் அமர்ந்திருக்க கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதற்கு மேல் செலவழிக்கும் ஒவ்வொரு நிமிடமும் மூலநோய் ஏற்படுவதற்கான ஆபத்தை 1.26 மடங்கு அதிகரிக்கிறதாம். மேலும் கழிப்பிடத்தில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் மனிதக் கழிவில் இருக்கக்கூடிய கிருமிகள் நாம் எல்லா இடங்களுக்கும் எடுத்துச் செல்லும் ஸ்மார்ட்போனில் ஒட்டிக்கொள்ளும் வாய்ப்புகளும் உள்ளன. லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் ட்ராபிகல் மெடிசன்ஸ் ( london School of Hygeine and Tropical Medicines) மற்றும் க்வீன்ஸ்பல்கலைக்கழகம் (Queens University) இணைந்து நடத்திய ஆய்வு ஒன்றில் ஆறில் ஒரு ஸ்மார்ட்போனில் மலத்தில் இருக்கக்கூடிய கிருமிகள் இருந்தது தெரியவந்ததுள்ளது. குத்திட்டு அமரவேண்டிய இந்திய பாணியிலான கழிப்பிடமே பாதுகாப்பானவை என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். “கூடுமானவரை இந்திய பாணி கழிப்பறையைப் பயன்படுத்துங்கள் ஒருவேளை மேற்கத்திய பாணி கழிப்பறைதான் என்றால் மறக்காமல் ஸ்மார்ட்ஃபோனை வெளியே வைத்துவிட்டுச் செல்லுங்கள்” என்கிறார்கள் மருத்துவர்கள்.