கண்புரை பாதிப்பு  கோப்பு படம்
ஹெல்த்

உலகில் 9.4 கோடி பேர் கண்புரை காரணமாக பாதிப்பு.. 15 நிமிடத்தில் அறுவை சிகிச்சையில் தீர்வு!

இந்தியாவிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் கண்புரையால் பாதிக்கப்பட்டோர் உரிய தருணத்தில் சிகிச்சைகளைப் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக லான்செட் இதழில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்துப் பார்க்கலாம்.

PT WEB

கண்பார்வையை பறிக்கக் கூடிய கண்புரைக்கு 15 நிமிடங்களில் அறுவை சிகிச்சை மூலம் தீர்வு காண முடியும். ஆனால், இந்தியாவில் மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளிலும் லட்சகணக்கானோர் கண்புரைக்கு உரிய தருணத்தில் முறையான சிகிச்சை கிடைக்காமல் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் 9 கோடியே 40 லட்சத்துக்கும் அதிகமானோருக்குக் கண்களின் இயற்கையான பார்வைத் திறனை குறைக்கும் கண்புரை ஏற்பட்டிருக்கிறது.

கண் சிகிச்சை

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இரண்டாயிரத்து 30ஆம் ஆண்டுக்குள் கண்புரை அறுவை சிகிச்சை இலக்கை அடைய முடியாத சூழலில் உள்ளதாக லான்செட் குளோபல் ஹெல்த் இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ள புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகில் உள்ள 68 நாடுகளில் கண்புரை அறுவை சிகிச்சை தேவைப்படும் 50 வயது மற்றும் 50 வயதுக்கும் மேற்பட்டோரில் பாதி எண்ணிக்கைக்கும் குறைவானவர்களே கண்புரை அறுவை சிகிச்சையின் மூலம் தெளிவான கண்பார்வை கிடைக்கப் பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் 2025ஆம் ஆண்டு 55 சதவீதத்தினர் கண்புரை அறுவை சிகிச்சை பெற்றிருக்க வேண்டும். ஆனால், கண்புரை அறுவை சிகிச்சை தேவைப்படும் இருவரில் ஒருவர் அதற்கான சிகிச்சையை பெறாமல் இருக்கின்றனர் அல்லது தெளிவான பார்வை கிடைக்காமல் உள்ளனர்.

2020ஆம் ஆண்டுக்கும் - 2030ஆம் ஆண்டுக்கும் இடையே 30 சதவீதம் என்ற இலக்கில் கண்பார்வையை மீட்டெடுக்கும் கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என 2021ஆம் ஆண்டு உலக நாடுகள் இலக்கை நிர்ணயித்தன. ஆனால், இப்போதைய வேகத்தில் சென்றால் இந்தப் பத்தாண்டுகளில் 8.4 சதவீதம் என்ற இலக்கை மட்டுமே எட்ட முடியும் என்று தரவுகள் கூறுகின்றன. இந்தியாவில் கண்புரை அறுவை சிகிச்சை கடந்த பல ஆண்டுகளாக அதிகரித்திருக்கிறது. ஆனால், அதிக எண்ணிக்கை என்பது மட்டுமே போதுமானதல்ல. சிகிச்சையின் தரமே முக்கியமாக மதிப்பிடப்பட வேண்டியிருக்கிறது.