மார்பக புற்றுநோய் என்றாலே மார்பகங்களில் ஏற்படும் கட்டிகள் அல்லது மாற்றங்கள் மட்டும்தான் அறிகுறி என்று நம்மில் பெரும்பாலோர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், சமீபத்தில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட 27 வயது இளம்பெண் ஒருவரின் மருத்துவப் பின்னணி பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அவருக்கு ஒரு மாதத்திற்கும் மேலாக கடுமையான முதுகுவலி இருந்த நிலையில், பரிசோதனை செய்தபோது அவருக்கு நான்காம் கட்ட மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
மார்பகத்தில் தொடங்கிய புற்றுநோய், அவரது முதுகுத்தண்டுவடம் மற்றும் எலும்புகளுக்குப் பரவியதே இந்த கடுமையான முதுகுவலிக்குக் காரணம் என்று மருத்துவர்கள் விளக்கியுள்ளனர். பொதுவாக இளம்பெண்களுக்கு ஏற்படும் முதுகுவலிக்கு தவறான உடல் நிலை, அதிக வேலைப்பளு அல்லது தசைப்பிடிப்பு போன்றவைதான் காரணமாக இருக்கும். ஆனால், வாரக்கணக்கில் நீடிக்கும் வலி, ஓய்வெடுத்தாலும் குறையாத வலி மற்றும் குறிப்பாக இரவில் தூக்கத்தை கெடுக்கும் வகையிலான கடுமையான முதுகுவலி இருந்தால் அதை சாதாரண தசைவலியாகக் கருதி அலட்சியப்படுத்தக் கூடாது.
எனவே மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்களை, சுய பரிசோதனை மூலம் மாதமொருமுறை பெண்கள் கவனிப்பது அவசியம். அதோடு, உடலில் தோன்றும் தொடர்ச்சியான வலிகளை ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் சென்று பரிசோதிப்பது, புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து உயிரைக் காக்க உதவும் என்று மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.