குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுதல் pt web
ஹெல்த்

14 லட்சம் குழந்தைகள் பாதுகாப்பில் வெற்றிடம்: இந்தியாவை எச்சரிக்கும் தடுப்பூசி ஆய்வு!

இந்தியாவில் 14 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு தடுப்பூசியின் ஒரு டோஸ் கூட செலுத்தப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது.

PT WEB

செய்தியாளர் தினேஷ் குகன்

இந்தியாவைப் பொறுத்தவரை, 14 லட்சத்து 40 ஆயிரம் குழந்தைகளுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்தப்படவில்லை

பிரிட்டனைச் சேர்ந்த தி லான்செட் (The Lancet) மருத்துவ இதழில் வெளியான ஒரு ஆய்வு முடிவு, இந்தியாவில் தடுப்பூசி செலுத்துதலில் உள்ள கவலைக்கிடமான நிலையை வெளிப்படுத்தியுள்ளது. 1980 முதல் உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகப்படுத்தப்பட்டும், 2020ஆம் ஆண்டு முதல் கோவிட் பெருந்தொற்று காரணமாக, இந்த பணிகள் தேக்கநிலையை எட்டியதாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

2023இல், உலகம் முழுவதும் ஒரு கோடியே 57 லட்சம் குழந்தைகளுக்கு, டிப்தீரியா, டெட்டனஸ் மற்றும் பெர்டுசிஸ் ஆகியவற்றிற்கான தடுப்பூசியின் ஒரு டோஸ் கூட செலுத்தப்படாதது தெரியவந்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, 14 லட்சத்து 40 ஆயிரம் குழந்தைகளுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடப்படாத குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில், நைஜீரியாவுக்குப் பிறகு இரண்டாவது இடத்தில் இந்தியா இருப்பதாக ஆய்வு கூறுகிறது.

இந்தியாவுக்கான எச்சரிக்கை மணி

இந்த ஆய்வு முடிவுகள், இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. நாட்டின் மருத்துவ துறையினருக்கு இது எச்சரிக்கை மணியாகவே கருதப்படுகிறது. குழந்தைகளை நோய்களில் இருந்து பாதுகாக்க, வலுவான மற்றும் நியாயமான தடுப்பூசி உத்திகளை வரையறுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் கருதுகின்றனர்.

2023 முதல் 2030க்குள் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டிய குழந்தைகளில் 65 சதவீதம் பேர், சஹாராவின் தெற்கில் அமைந்துள்ள ஆப்பிரிக்க பிராந்தியத்திலும் தெற்கு ஆசியாவிலும் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தெற்காசியாவில் மட்டும் 13 லட்சத்து 30 ஆயிரம் பேர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் 1974 இல் EPI (Expanded Programme on Immunization) திட்டத்தை தொடங்கியது முதல், கடந்த 50 ஆண்டுகளாக, 400 கோடிக்கும் அதிகமான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. உயிரிழப்புகளில் இருந்து 15 கோடியே 40 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுத மோதல்கள், அரசியல் ஸ்திரமின்மை, நிலையற்ற பொருளாதாரம், காலநிலை நெருக்கடிகள் மற்றும் தடுப்பூசி குறித்த தவறான தகவல்கள் போன்ற பல்வேறு சவால்கள் காரணமாக, தடுப்பூசி விநியோகம் பாதிக்கப்படுவதாகவும், இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது அவசியம் என்றும் ஆய்வின் முதன்மை ஆசிரியர் எமிலி ஹவுசர் தெரிவித்துள்ளார். உரிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், 2030 ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய தடுப்பூசி இலக்குகளை அடையமுடியாது என்பதை இந்த ஆய்வு முடிவு எச்சரிப்பதாக மருத்துவ வல்லுநர்கள் கருதுகின்றனர்.