Laser Angioplasty web
ஹெல்த்

”லேசர் ஆஞ்சியோ பிளாஸ்டி நல்லதல்ல” - இதய நோயாளிகளை எச்சரிக்கும் நிபுணர்கள்!

குறிப்பிட்ட சில சூழல்களில் லேசர் ஆஞ்சியோ பிளாஸ்டியால் பலன் உண்டு. இளம் வயதினர் லேசர் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளலாம். மீண்டும் ரத்த நாளம் பாதித்தால் லேசர் ஆஞ்சியோ பிளாஸ்டி உதவும்.

PT WEB

லேசர் முறையில் வலியற்ற சிகிச்சை என்பதே இப்போது நோயாளிகளை கவர்ந்து இழுப்பதற்கான மந்திர வார்த்தைகளாக இருக்கின்றன. ஆனால், அனைத்து விதமான நோய்களுக்கும் லேசர் முறையிலான சிகிச்சை சரியல்ல. குறிப்பாக தோலுக்கு லேசர் முறையில் சிகிச்சை அளிப்பதுபோல இதயத்தின் ரத்த நாளங்களில் இருக்கும் அடைப்பை நீக்க லேசர் ஆஞ்சியோ பிளாஸ்டி சரியாக இருக்காது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஆஞ்சியோ பிளாஸ்டியை லேசர் முறையில் மேற்கொள்வது என்பது ஸ்டன்ட்வைக்க தேவையில்லை, உடலில் ஊடுருவி சிகிச்சை அளிக்க வேண்டியதில்லை என்று மக்கள் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால், அது உண்மையல்ல என இதய நோய் மருத்துவர்கள் கூறுகின்றனர். இதய ரத்த நாளங்களுக்கு உள்ளே படிந்திருக்கும் கால்சியம் படிவுகள், மென்மையான கட்டிகளை அகற்றுவதற்கு, புற ஊதா துடிப்புகளை சிறப்பு வாய்ந்த குழாய் வழியே உட்செலுத்துவது மட்டுமே லேசர் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையாகும்.

heart

இந்த சிகிச்சைக்கு வழக்கம்போல ஸ்டன்ட், பலூன் போன்றவையும் தேவைப்படுகிறது. ஆகவே, இது வலியற்ற விரைவான சிகிச்சை முறை அல்ல. குறிப்பிட்ட சில சூழல்களில் மட்டுமே லேசர் ஆஞ்சியோ பிளாஸ்டி பலன் அளிக்கும் என்பதும் மருத்துவர்கள் வாதமாக இருக்கிறது. மாரடைப்பால் பாதிக்கப்படும் 20 - 30 வயதில் இருக்கும் இளம் வயதினருக்கு, அவர்களின் ரத்த நாளங்களில் அதிக அளவு கொழுப்பு படியாமல் பெரும் கட்டிகள் மட்டுமே இருக்கும். அந்தத் தருணங்களில் லேசர் முறையில் புற ஊதா துடிப்புகளை உட்செலுத்தி கட்டிகளை கரைக்க சிகிச்சை அளிக்க முடியும். ஏற்கெனவே ஆஞ்சியோ பிளாஸ்டி மேற்கொள்ளப்பட்ட நோயாளிகளுக்கு புதிய அடைப்புகள் ஏற்படும்போதும் இதுபோன்று லேசர் அடிப்படையில் சிகிச்சை அளிக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். எல்லோருக்கும் இந்த முறை பொருந்தாது.