குழந்தை புற்றுநோய் x
ஹெல்த்

குழந்தை புற்றுநோய்.. இந்தியாவில் முதல் 10 காரணிகளில் ஒன்றாக அதிகரிப்பு! ஆய்வில் அதிர்ச்சி!

இந்தியாவில் குழந்தைகளின் உயிரிழப்பிற்கான முதல் 10 காரணங்களில் ஒன்றாகப் புற்றுநோய் உருவெடுத்துள்ளதாக 'லான்செட்' ஆய்வு தெரிவிக்கிறது.

PT WEB

தி லான்செட் ஆய்வு, தொற்றுநோய்களை விட தொற்றாத நோய்களின் தாக்கம் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் வேகமாக அதிகரிப்பதை எச்சரிக்கிறது.

இந்தியாவில் சிறுவர்கள் மற்றும் இளம் பருவத்தினரிடையே ஏற்படும் உயிரிழப்புகளுக்குப் புற்றுநோய் ஒரு முக்கிய காரணியாக உருவெடுத்துள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற 'தி லான்செட்' மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ள 'சுமையாகும் உலகளாவிய நோய்கள் - 2023' ஆய்வின் முடிவுகள் இதனை உறுதிபடுத்தியுள்ளன.

புற்றுநோய்

இந்தியாவில் 5 முதல் 19 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் உயிரிழப்புக்குக் காரணமாக அமையும் பத்து முக்கியக் காரணிகளில் புற்றுநோய் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ரத்தப் புற்றுநோய், மூளைக்கட்டிகள் மற்றும் நிணநீர் சுரப்பி புற்றுநோய் போன்றவை இந்தியச் சிறுவர்களிடையே அதிகம் காணப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

புற்றுநோய் பாதித்த பல சிறுவர்களுக்குச் சரியான நேரத்தில் நோய் கண்டறியப்படாததும், சிகிச்சையைப் பாதியிலேயே நிறுத்துவதும் உயிரிழப்புகள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. குழந்தைகளிடையே புற்றுநோய் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் குணமடையும் விகிதத்தை அதிகரிக்க முடியும்.

மாநில மற்றும் மாவட்ட அளவில் பிரத்யேக குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சை மையங்களை விரிவுபடுத்த வேண்டியது அவசியம். புற்றுநோய் என்பது குணப்படுத்தக்கூடிய ஒரு நோய் என்ற விழிப்புணர்வைப் பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் கொண்டு செல்ல வேண்டும். தொற்றுநோய்களைக் காட்டிலும் இத்தகைய தொற்றாத நோய்களின் தாக்கம் வளர்ந்து வரும் நாடுகளில் அதிகரித்து வருவது பொதுச் சுகாதார வல்லுநர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து செயல்படுவதன் மூலம் மட்டுமே இந்த அபாயத்தைக் குறைத்து, வளரும் தலைமுறையினரின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய முடியும்.