இந்தியர்களில் 12 விழுக்காடு பேருக்கு, சிறுநீரகக் கல் பிரச்னைகள் இருப்பது, ஆய்வில் தெரியவந்துள்ளது.
சிறுநீரகங்களில் உருவாகும் கடினமான கனிமத் துகளே, சிறுநீரகக் கற்கள் என அறியப்படுகிறது. மனிதர்களுக்கு இந்த பிரச்னை பன்னெடுங்காலமாக இருப்பது, எகிப்திய மம்மிகளை ஆய்வு செய்ததில் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள அலபாமா பல்கலைக்கழகம் சிறுநீரகக் கல் குறித்து ஆய்வு நடத்தியது. அதில், இந்தியர்களில் 12 விழுக்காடு பேருக்கும், வட இந்தியாவில் மட்டும் 15 விழுக்காடு பேருக்கும் இந்தப் பிரச்னை இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், 20 முதல் 40 வயதுக்குள் இருப்போருக்கு, 30 முதல் 40 விழுக்காடு வரை சிறுநீரகக் கல் பிரச்னை இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அதிக அளவில் ஆக்ஸலேட் உள்ள உணவுகளான, பசலைக்கீரை, உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள், தேன், சாக்லேட், உப்பு மற்றும் புரதம் அதிகமான உணவுகளை உண்பதே சிறுநீரக கற்களை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்தப் பாதிப்புகள் இருப்போர், இந்த உணவுகளைத் தவிர்ப்பதோடு, தினசரி 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.