நீரிழிவுக்கு சிறுதானியங்கள் மட்டுமே தீர்வா? மாற்று உணவுகள் என்ன?
இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் நீரிழிவு மற்றும் உடல் பருமனுக்கு, பதப்படுத்தப்பட்ட மாவுச்சத்து மற்றும் நிறைவுற்ற கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை உண்பதே முக்கியக் காரணம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம்.
ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நகர்ப்புற, கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த ஒரு லட்சத்து 21 ஆயிரம் பேரிடம், அவர்களின் உணவுப்பழக்கம் குறித்த ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வு முடிவுகள் நேச்சர் மெடிசின் இதழில் வெளியாகின. இந்த ஆய்வில் இந்தியர்கள் உட்கொள்ளும் கலோரிகளில் 62 விழுக்காட்டை மாவுச்சத்து நிறைந்த உணவுகளில் இருந்தே பெறுகிறார்கள். உலக அளவில் மாவுச்சத்து உணவுகள் மிக அதிகமாக உண்ணப்படும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
இந்தியாவின் தெற்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் உணவில் வெள்ளை அரிசி ஆதிக்கம் செலுத்துகிறது. வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் அரசியின் இடத்தை கோதுமை பிடித்துக்கொள்கிறது. சர்க்கரையைவிட, அரிசி மற்றும் கோதுமை ஆகியவையே நீரிழிவு நோயை அதிகமாக்குகின்றன என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பால் மற்றும் விலங்குப் புரதங்களின் நுகர்வு, நாடு முழுவதும் சராசரியாக 12% என்ற குறைவான அளவில்தான் உள்ளது.
தினமும் மாவுச்சத்து உணவுகள் மூலம் நாம் உட்கொள்ளும் கலோரியில் வெறும் 5 விழுக்காட்டைத் தாவர அல்லது பால் புரதத்திலிருந்து பெறும் வகையில் மாற்றினால் நீரிழிவு அபாயத்தைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்று இந்த ஆய்வை நடத்திய நிபுணர்கள் கூறுகின்றனர். வெள்ளை அரிசி மற்றும் கோதுமைக்குப் பதிலாக சிறுதானியங்களைச் சாப்பிடுவது மட்டும் போதாது; மொத்த மாவுச்சத்து நுகர்வைக் குறைத்து, தரமான புரதத்தை அதிகரிப்பதன் மூலமாகத்தான் உடல் பருமன், நீரிழிவு ஆபத்துகளைத் தவிர்க்க முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
எனவே, பால் புரதம் நிறைந்த உணவு முறைக்கு மாற வேண்டும் என்று ஆய்வு பரிந்துரைக்கிறது. ஆரோக்கியமான எண்ணெய் மற்றும் அதிகப் பயறு வகைகளை உண்பதை ஊக்குவிப்பது, தேசத்தின் ஆரோக்கியத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அரசு வழங்கும் உணவு மானியங்களில் கொள்கை மாற்றங்கள், ஊடகங்கள் மூலம் பாதுகாப்பான உணவுப்பழக்கங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரித்தல் ஆகியவற்றையும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.