3டி மூளை வளர்ச்சி புதிய தலைமுறை
ஹெல்த்

உலகில் முதன்முறை... கருவில் இருந்து இளமைப்பருவம் வரை... 3D-ல் மூளை வளர்ச்சி டிஜிட்டல் இமேஜிங்!

உலகில் முதன்முறையாக வயிற்றில் இருக்கும் கருவின் மூளை வளர்ச்சியை முப்பரிமாண டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் படமாக்கி இருக்கிறார்கள் சென்னை ஆராய்ச்சியாளர்கள்.

PT WEB

செய்தியாளர்: பால வெற்றிவேல் நவநீதகிருஷ்ணன்

கடந்த நூறு ஆண்டுகளாக மூளை குறித்தான ஆராய்ச்சி பல நாடுகளால் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் முதன்முறையாக வயிற்றில் இருக்கும் கருவின் மூளை வளர்ச்சியை முப்பரிமாண டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் படமாக்கி இருக்கிறார்கள் சென்னையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.

1300 முதல் 1400 கிராம் எடை கொண்ட மனித மூளை, சுமார் பத்தாயிரம் கோடி நியூரான்களால் கட்டமைக்கப்பட்டது. மனிதன் எப்படி சிந்திக்கிறான்? அவன் புத்தி கூர்மை எப்படி உள்ளது அவனுடைய ஞாபக சக்திக்கு என்ன காரணம் என்பதை கண்டறிவதற்கான முயற்சியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவியல் உலகம் ஈடுபட்டு வருகிறது.

மூளையில் உள்ள ஒவ்வொரு நியூரான் செல்லின் அளவும் 4 முதல் 100 மைக்ரோ மீட்டர்கள்தான். அதாவது ஒவ்வொரு நியூரான் செல்களின் அளவும் நமது தலைமுடியின் அளவைவிட 100 மடங்கு சிறியதாகும். கணினி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் நிகழ் திரையின் முன்னேற்றம் போன்ற காரணங்களினால் மனித மூளையின் முப்பரிமாணத்தை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுவருகிறார்கள்.

இந்த முயற்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள் முதல் முறையாக இறங்கினாலும் அவர்கள் வடிவமைத்துள்ள மூளையின் முப்பரிமாண படங்கள் அனைத்தும் முழுமை அடையாமல் பாதி பகுதிகள் மட்டுமே படமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சென்னையை சேர்ந்த பேராசிரியர்கள் இணைந்து கருவில் உள்ள குழந்தையின் மூளையின் முப்பரிமாண டிஜிட்டல் படத்தை காட்சிப்படுத்தியுள்ளனர்.

2022 ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்ட சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையத்தில் தலைவர் பேராசிரியர் மோகனசங்கர் சிவப்பிரகாசம் தலைமையிலான இந்த ஆராய்ச்சி இந்தியாவிற்கு மிக முக்கியமான ஒன்றாகும்.

உலகத்திலேயே முதல் முறையாக 5,132 மூளையின் தனித்தனி பகுதிகளை மொத்தமாக பகுப்பாய்வு செய்து முப்பரிமாண டிஜிட்டல் படமாக வடிவமைக்கப்பட்டிருப்பது நாட்டுக்கு பெருமை மிகுந்த தருணம் எனத் தெரிவிக்கிறார் பேராசிரியர் குமுதா. கருவில் இருந்து ஒவ்வொரு பருவத்திலும் கற்றல் குறைபாடு, மன இறுக்கம் போன்ற குறைபாடுகளை புரிந்து கொள்வது அவசியமாகிறது.

இத்தகைய மேம்பட்ட மனித நரம்பியல் தரவுகள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும். நூறாண்டுகள் பழமை வாய்ந்த நரம்பியல் அறிவியல் இதழான ஜர்னல் ஆஃப் கம்பேரிட்டிவ் நியூராலஜி (Journal of Comparative Neurology) இந்த ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகளை சிறப்பு இதழாக வெளியிட்டது தனித்துவமிக்கதாக பார்க்கப்படுகிறது.