மாரடைப்பால் ஒருவர் உயிரிழந்தார் என்பதே ஒரு காலக்கட்டத்தில் பரபரப்பான செய்தியாக இருக்கும். கிராமங்களில் எல்லாம் ‘ஹார்ட் அட்டாக்காம்’ என அதன்மீதான பயத்தினைப் பேசிப்பேசியே, இறந்தவர் மீதான தங்களது துக்கத்தை தெரிவித்துச் செல்வார்கள். காதால் கேட்ட செய்திக்கே மக்கள் அத்தனை துயரை கொட்டினர்.
தற்போதோ எங்கும் சிசிடிவிக்களும், எல்லோர் கைகளிலும் கேமரா செல்போன்களும் இருக்கும் நிலையில், கண்முன் மாரடைப்பால் பறிபோகும் உயிரை சக மனிதர்களால் காப்பாற்றக்கூட முடியவில்லையே என்ற வேதனை அனைவரையும் பீடித்துதான்கொள்கிறது.
அதிலும், தனது மகளின் திருமண நிகழ்வில் மகிழ்ச்சியாக நடனமாடும் தந்தை உயிரிழப்பது, தனது சக நண்பர்களுடன் நடனமாடிய இளைஞன் உயிரிழப்பது, உடல்நலம் ஒன்றேகுறி என்று ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது, கிரிக்கெட் விளையாடும்போது, ஏன் சாதரணமாக பேசிக் கொண்டிருக்கும்போது கூட சிலர் மாரடைப்பால் உயிரிழப்பது என அத்தனை வீடியோக்களையும் நாட்டு மக்கள் பார்க்கின்றனர். அந்த நொடியில் தொற்றிக்கொள்ளும் பயம், ‘வாழ்க்கன்னா அவ்ளோதான்ல’ என புலம்ப வைக்கும். ஆனால், நாமாவது மருத்துவமனைக்கு சென்று முழு உடற்பரிசோதனை செய்து கொள்ளலாம் என முடிவெடுப்போர் மிகச் சொற்பமே.
அந்த பரிசோதனை, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் எத்துணை முக்கியமானது என்பதை காலம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்கிறது. குழந்தைகளில் மாரடைப்பு என்பது பெரியவர்களிடம் இருந்து வேறுபட்டது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால், பரிசோதனை மிக முக்கியமானது என்கின்றனர் மருத்துவர்கள்.
சமீபத்திய நிகழ்வுகளே அதற்கான காரணத்தைச் சொல்லும். கர்நாடகாவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் காரிடாரில் தனது சக தோழிகளுடன் நின்றுகொண்டிருந்த 3ஆம் வகுப்பு மாணவி திடீரென நிலைகுலைந்து விழுந்துள்ளார். பள்ளியில் உள்ள ஊழியர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டில் கூட, உத்தரபிரதேசத்தின் லக்னோவில் மட்டும் குறிப்பிட்ட 25 நாட்களுக்குள் 5 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். அதில் 2 பேர் குழந்தைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், குழந்தைகளுக்கு இதயப்பரிசோதனை செய்வது எவ்வளவு முக்கியம் என்பது குறித்து குழந்தைகள் நல மருத்துவர் ஜெயக்குமார் ரெட்டியிடம் பேசினோம். அவர் கூறியதாவது, “நமக்கு இதயம் சார்ந்த பிரச்னைகள் இருக்கிறதா? இல்லையா? என்பதையே பெரும்பாலான மக்கள் பரிசோதித்து தெரிந்துகொள்ளாமல் இருக்கின்றனர். குழந்தைகளுக்கும் Congenital heart disease (பிறவி இதய நோய்) இருக்கலாம். நாம் முதலிலேயே பரிசோதித்து தெரிந்துகொள்ள வேண்டும்.
பொதுவாக கடைசியில் ஏற்படும் நிகழ்வான மாரடைப்பினைக் கொண்டுதான் ஒருவரது இறப்பினைக் குறிக்கிறோம். வேறு ஏதேனும் நோய் இருந்து அது சார்ந்தும் மாரடைப்புகள் வரலாம் என்பதும் முக்கியமானது. இளவயது மாரடைப்புகளில், குடும்பத்தில் யாருக்காவது இதற்கு முன்பு வந்திருந்து, மரபு சார்ந்தும் மாரடைப்பு வரலாம்.
குழந்தை பிறக்கும்போதே முழுமையான பரிசோதனை செய்துகொள்வது நல்லது. குழந்தைகளின் உடல் எடை அதிகரிப்பு அல்லது குறைவுகளில் ஏதேனும் பிரச்னை இருந்தால் அப்போதும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதேபோல் குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதற்கு முன்பும் முழுமையான பரிசோதனை செய்ய வேண்டும். எந்த குழந்தையின் உடல்நலனும் ஒரேமாதிரி இருக்காது. எனவே, குழந்தைகளை திடீரென அதிகமான உடற்பயிற்சிகள் செய்ய சொல்வது கூடாது. குழந்தைகளுக்கு நடனப் பயிற்சியோ, உடற்பயிற்சியோ கற்றுக்கொடுப்பவருக்கு, ஒவ்வொரு குழந்தையின் செயல்திறன் குறித்தும் தெரியவேண்டும்.
pulse oximeter போன்ற குட்டிக் குட்டி உபகரணங்களை பள்ளிகளிலேயே வைத்திருக்க வேண்டும். பள்ளிகளில் முதலுதவி மையம் இருப்பது நல்லது. சில பள்ளிகளில் நடனங்கள் போன்ற பயிற்சிகளின்போது, ரிகர்சல் என்ற பெயரில் மாணவர்கள் இருக்க வைக்கப்படும் நேரத்தில் நீராகாரங்கள் மற்றும் உணவுகளை முறையாகக் கொடுக்க வேண்டும். அனைத்தையும் தாண்டி முறையான உணவுப்பழக்கம் மிக முக்கியமானது” எனத் தெரிவித்தார்.