Split Tongue ஏன் ஆபத்து? புதிய தலைமுறை
ஹெல்த்

‘Split Tongue’ விபரீதம் தெரியாமல் இறங்கும் இளைஞர்கள்... மருத்துவர் தரும் எச்சரிக்கை!

நாக்கை இரண்டாக பிளக்கும் அறுவை சிகிச்சையை பலருக்கு செய்து வந்த திருச்சியை சேர்ந்த ஹரிஹரன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

டாட்டூ எனப்படும் உடலில் பச்சை குத்தும் வழக்கமானது, பல வருடங்களாக நம்மூரில் இருப்பதுதான். ஆனால், கடந்த சில வருடங்களாக அந்த பழக்கம் எல்லை மீறி செல்கிறது என்பது மறுப்பதற்கில்லை. ஃபேஷன் என்ற பெயரில் உடலின் சென்சிடிவான இடங்களில் டாட்டூ குத்திக்கொண்டு தங்களுடைய உடல் அமைப்பையே மாற்றிக்கொண்டு, விபரீத செயல்களில் பலர் ஈடுபடுகின்றனர்.

திருச்சி: ஹரிஹரன் என்ற இளைஞர் நாக்கை வெட்டி டாட்டூ

குறிப்பாக, ஏலியன் டாட்டூ , நாக்கை இரண்டாக வெட்டிக்கொள்வது, மூக்கில் துளை இட்டுக்கொள்வது, கண்களின் நிறங்களை மாற்றிக்கொள்வது என எல்லை மீறும் செய்திகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை காண முடிகிறது. இப்படி, நாக்கை வெட்டிக்கொள்வது அறுவை சிக்கிசையை பலருக்கு செய்வது என்று இருந்த திருச்சியை சேர்ந்த ஹரிஹரன் என்ற இளைஞரை, சட்டவிரோத செயலில் ஈடுபட்டதற்காக காவல்துறையினர் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.

இப்படி, நாக்கை இரண்டாக பிளப்பது, அதுவும் சரியான படிப்பும் பயிற்சியும் இல்லாத ஒரு இளைஞர் பலருக்கு இதனை செய்வது எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று Plastic & Cosmetic Surgeon மருத்துவர் சசிகுமார் முத்துவிடம் கேட்டறிந்தோம்.

இது குறித்து அவர் தெரிவித்தவற்றை காணலாம்..

Dr Sasikumar Muthu MS MCh Plastic & Cosmetic Surgeon

மருத்துவர் சொல்வது என்ன?

“டாட்டூ போடுவதற்கென தகுந்த பயிற்சி பெற்றவர்கள், அதற்கேற்ற அனுமதி பெற்ற நிலையங்களை வைத்திருப்பவர்கள் ஆகியோரிடம் டாட்டூ போட்டுக்கொள்வது என்பதுதான் சரி. இதற்கு மாறாக தகுந்த பயிற்சி இல்லாத ஒருவர் டாட்டூ போடுவது என்பது பல விபரீத பிரச்னைகளை உண்டாக்கும்.

‘மற்றவர்களிடமிருந்து நாம் தனித்து தெரிய வேண்டும், ஒருவர் நமது ideology-ஐ வெளிப்படுத்த வேண்டும்’ போன்ற பல காரணங்களுக்காக இப்படி விபரீதமாக டாட்டூ போட்டுக்கொள்கின்றனர். இதை சரி, தவறு என்று நாம் சொல்லப்போவதில்லை. ஆனால் இவற்றையெல்லாம் யார் செய்கின்றார் என்பது முக்கியம். சரியான முறையில், தகுந்த பயிற்சி பெற்றவர்கள் மேற்கொள்வது மட்டுமே, நன்மை பயக்கும்.

ஏற்படும் பாதிப்பு!

ஆனால், இப்படி நாக்கை இரண்டாக பிளந்து.. எந்த முறையான பயிற்சியும் இல்லாதவர்கள் டாட்டூ போடுவது என்பது சரியான நடைமுறை கிடையாது.

  • இதனால், முதலில் உண்டாகும் பாதிப்பு வலி. நாக்கை பிளப்பது என்பது சுலபமான வேலையும் கிடையாது. இதனால் ஏற்படும் வலியால் மயக்கமடைந்து இறுதியில் மரணம் ஏற்படக்கூட வாய்ப்புகள் அதிகம்.

  • ஒருவேளை உயிர்பிழைத்தாலும், நாக்குகில் ஏற்படும் காயங்களும் உடனடியாக ஆறாது. முழுவதுமாக ஆறுவதற்கு குறைந்தது 2 -3 வாரங்கள் ஆகும். இதனால், பேசுவது, உணவு உண்பதைக்கூட சரியாக செய்ய முடியாது. மேலும், அதிகப்படியான ரத்தக்கசிவு ஏற்படும்.

  • குறிப்பாக, ரத்தநாளங்கள் அதிகப்படியாக இருக்கும் நாக்கை, இரண்டாக பிளக்கும்போது அதிகபடியான ரத்தக்கசிவு ஏற்படுகிறது.

  • மேலும், அறுவை சிகிச்சை செய்ய பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்கள் சரியாக STERILE செய்யப்படாமல் இருந்தால் தொற்று ஏற்படும் அபாயம் உண்டாகி இறுதியில் நாக்கின் அமைப்பையே இழந்துவிட வாய்ப்புள்ளது.

  • நாக்கின் நரம்புகளை தவறுதலாக வெட்டிவினால், அதன் அசைவுகள் முழுவதுமாக மாறிவிடும். இதனால், உணவு உண்பதில் பிரச்னை, பேச்சின்மை ஏற்படும்.

  • உணவின் சுவையை அறிவதற்கு நாக்கு முக்கியமான ஒன்று. நாக்கை வெட்டும் பட்சத்தில் சுவை உணர்விகளையே இழக்க நேரிடும். இதனால், உணவின் சுவை அறிவதில் சிக்கல் ஏற்படும்.

  • சுவை உணர்தல், எச்சில் சுரத்தல், ரத்த நாளங்கள் என பலவகையான பணிகளை நாக்கு செய்து வருகிறது... Plastic சர்ஜரி செய்யும் மருத்துவர்களுக்கு கூட நாக்கை அறுவை சிகிச்சை செய்வது என்பது மிகவும் கடினமான காரியம்.

அபாயத்தை உணர்வதில்லை.. 

இதையெல்லம் யாரும் அறிவதில்லை. இதனை மிகவும் சாதாரண ஒரு விஷயமாக இளைஞர்கள் மாற்றி வருகின்றனர்.

அதிகபட்ச வலியை சந்திக்ககூடும் என்று தெரிந்தும் இதை செய்கிறார்கள் எனில், அவர்களது குழந்தைப்பருவம் எப்படியாக இருந்தது, இதில் சமூக ஊடகத்தின் பங்கு என்ன? என்பது குறித்து சரியாக ஆய்வு செய்து இவர்களுக்கு சரியான மனநல ஆலோசனை என்பது கொடுக்கப்பட வேண்டி இருக்கிறது” என்றார்.