மாரடைப்பு மரணங்கள் முகநூல்
ஹெல்த்

30 ஆண்டுகளில் 2 மடங்காக அதிகரித்த மாரடைப்பால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை!

சமீப காலமாக அதிகரித்தபடியே இருக்கும் மாரடைப்பால் ஏற்படும் மரணங்கள்.

PT WEB

செய்தியாளர்: பால வெற்றிவேல்

இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் மாரடைப்பால் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் 35 வயதுக்கும் குறைவானவர்களுக்கு இதய நோய் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மத்தியப்பிரதேசத்தில் திருமண விழாவில் உற்சாகத்துடன் நடனம் ஆடிக்கொண்டிருந்த பெண் அப்படியே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். 23 வயதே ஆன அந்த பெண் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுபோன்ற சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்தபடியே இருப்பதை காணமுடிகிறது. அதிலும் குறிப்பாக இளவயது மாரடைப்பு மரணங்கள் அதிர வைக்கின்றன. இந்திய இதய சங்கத்தின் கூற்றுப்படி, இந்திய ஆண்களில் 50% மாரடைப்புகள், 50 வயதிற்குட்பட்டவர்களுக்கும், 25% மாரடைப்புகள் 40 வயதிற்குட்பட்டவர்களுக்கும் ஏற்படுகிறது.

45 வயதுக்கு சற்று அதிகமானவர்களிடையே இதய நோய்கள் அதிகமாக உள்ளன. உலக அளவில் இதய நோய் தொடர்பான இறப்புகளில் ஐந்தில் ஒருவர் இந்தியாவை சேர்ந்தவர் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

இந்தியாவில் 1990ம் ஆண்டு 22.4 லட்சம் மக்கள் இதய நோயால் மரணம் அடைந்ததாக தேசிய சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிய வந்துள்ளது.

இதுவே 30 வருடங்கள் கழித்து இந்த எண்ணிக்கை 47.7 லட்சமாக அதிகரித்துள்ளது. அதாவது 30 வருடங்களில் இந்தியாவில் இதய நோயால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

2016 ஆம் ஆண்டில், இந்தியாவில் மொத்த இறப்புகளில் 63% தொற்றாத நோய்களால் ஏற்பட்டதாக பதிவாகியுள்ளது, இதில் 27% இதய நோயால் ஏற்பட்டவை என உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் கிராமப்புற மக்களில் 7.4% வரையிலும், நகர்ப்புற மக்களில் 13.2% வரையிலும் இதய நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு பல காரணிகளை சுட்டிக்காட்டுகிறார்கள் மருத்துவர்கள்.

தெற்காசியர்கள் மரபணு ரீதியாக இதய நோய் பாதிப்புக்கு ஆளாவதாகவும் அதிகப்படியாக நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், தங்களது வாழ்க்கை முறையை மாற்றம் செய்ய வேண்டும் எனவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.இதய நோயை கண்டறிவதற்கும் சரிசெய்வதற்கும் பலவிதமான முறைகள் இருந்தாலும் இதயம் அதிக அளவில் பாதித்த பிறகே தெரியவருவதால், மரணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள். இதயம் காப்பது நமது உடலை காப்பதற்கு நாம் எடுக்கும் முதல் படி எனக் கூறும் மருத்துவர்கள், நவீன வாழ்க்கை முறையில் ஆரோக்கியமான வாழ்வியல்முறையை அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்கிறார்கள்.