கோப்புபடம் Pt web
ஹெல்த்

அவசர, அவசரமாக உணவு உண்பது உடல்நலனுக்கு கேடு... உடல்நலனுக்கு ஏற்றபடி சாப்பிடுவது எப்படி?

உணவை அவசர, அவசரமாக சாப்பிடுவது நாளடைவில் உங்கள் இதயத்துக்கே ஆபத்தாக முடியும். உணவை மெதுவாக உடல்நலனுக்கு ஏற்றபடி சாப்பிடுவது எப்படி என்பது குறித்துப் பார்க்கலாம்.

PT WEB

ஃபாஸ்ட் புஃட், குயிக் மீல்ஸ் என்று உணவுகளின் பெயரிலேயே விரைவு தூக்கலாக இருக்கும் காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம். நேரம் கருதி விரைவாக உண்கின்றோம், கைபேசி, தொலைக்காட்சி போன்ற திரைகளைப் பார்த்தபடி உண்கிறோம். ஆனால், இவையெல்லாம் தவறு என்பது தெரிந்தும் அப்படி உண்பதால் நமது உடலுக்குள் ஏற்படும் மாற்றத்தை நாம் தெரிந்துகொள்ளாமல் இருப்பது என்பது அபாயத்தை அறியாமல் இருக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

online food

ஊட்டசத்து குறித்த ஃப்ரான்டியர்ஸ் என்ற அமைப்பு 2021ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில், அவசர, அவசரமாக உண்பது உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், வளர்சிதை மாற்றம், இதய நோய், நீரிழிவு ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் கொண்டதாகும் என்று எச்சரிக்கிறது. நேச்சர் இதழ் பிரசுரித்த 2024ஆம் ஆண்டு ஆண்டின் ஆய்வில் கல்லீரலில் கொழுப்பு படியும் அபாயம் உள்ளது என்பதும் உறுதியாகிறது. சாப்பிடும்போது நன்றாக மென்று உண்ணாமல் அவசரமாக உணவை வாயில் போட்டு விழுங்குவதால் உணவு அரைபடாமல் முழுமையாக வயிற்றுக்குள் செல்கிறது.

நீங்கள் அதிக அளவில் காற்றை வாய் வழியே விழுங்குவதால் அடிவயிறு வீக்கம், நெஞ்சு எரிச்சல் ஆகியவை ஏற்படும். மெதுவாக மென்று உண்ணும்போது குடல்-மூளை இடையேயான சமிக்ஞைகள் முழுமையான உணவு உண்ட திருப்தியை அளிக்கும். குளுக்கோஸ் அதிகரிப்பதையும் தடுக்கும். மென்று உண்ணக்கூடிய வகையிலான நார்ச் சத்து அதிகம் கொண்ட பழங்கள், காய்கறிகள், விதைகள் போன்றவற்றை உண்ணுங்கள். அதீதமாகப் பதப்படுத்தப்பட்ட விரைவு உணவுகள் உங்கள் உடலில் கலோரியை அதிகரித்து உடலைப் பருமன் ஆக்கும்.

உணவை அருந்தும் முறை

சாப்பிடும்போது உங்கள் கைபேசியை தூரத்தில் வைத்துவிட்டு உணவில் மட்டும் கவனம் செலுத்துங்கள். சக நண்பர்கள், குடும்பத்தினர், உறவினர்களுடன் இணைந்து உண்பது, உண்பதை மேலும் அர்த்தமுள்ளதாக்குவதுடன் மெதுவாக உண்ணலாம். உணவு உண்பது என்பது ஒரு சமூகப் பழக்கம் என்பதை மறந்துவிடவேண்டாம். உணவை முழுமையாக அனுபவித்து உண்ணுங்கள்.