சீனாவில் புதியதாக HMPV என்ற வைரஸ் பரவிவரும் நிலையில், மீண்டும் கொரோனா போன்ற கடும் பாதிப்பை அது ஏற்படுத்திவிடுமோ என மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த தொற்றின் காரணமாக சீனாவில் உள்ள மருத்துவமனைகளில் மக்கள் அலைமோதுவதாக கடந்த சில தினங்களாகவே வீடியோக்கள் பகிரப்பட்டு வருவதும் அச்சத்துக்கு முக்கிய காரணமாக உள்ளது.
இருப்பினும் சீன தரப்பில் அதிகாரப்பூர்வமாக இப்படியொரு அச்சுறுத்தல் தெரிவிக்கப்படவில்லை.
இந்த சூழலில் இந்தியாவில் முதல்முறையாக HMPV வைரஸ் தொற்றானது இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எந்தவிதமான வெளிநாட்டு பயணமும் செய்யாத சூழ்நிலையிலும் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
HMPV வைரஸ் என்பது human metapneumo virus என்பதின் சுருக்கம். கொரோனா போலவே மூச்சுக்குழாயை பாதிக்கக்கூடும் ஒரு வகையான வைரஸ் தான் HMPV. தற்போது சீனாவின் வடக்கு பகுதிகளில் அதிகம் பரவி வருகிறது. குறிப்பாக, 14 வயதுக்கு கீழ் உள்ளவர்களை இந்த வைரஸ் அதிகமாக தாக்குவதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் இது பருவ காலங்களில் வரும் சாதாரண தொற்று போன்றதுதான் என்றும், கொரோனா போல அச்சப்பட தேவையில்லை என மருத்துவர்கள் மற்றும் சீன மருத்துவ ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.
அதே போல “HMPV வைரஸ் என்பது அசாதாரண வைரஸ் கிடையாது. இது இந்தியாவிலும் ஏற்கெனவே உள்ளது. எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை” என்று Joint Monitoring Group (JMG) மீட்டிங் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிகுறிகள் என்ன?
HMPV வைரஸ் தொற்றின் அறிகுறிகளாக, சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுத்திணறல் போன்றவை கூறப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் HMPV வைரஸ் தொற்று கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், பக்கத்து மாநிலமான கர்நாடகாவின் பெங்களூருவில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மூன்றாவது பாதிப்பு, குஜராத்தில் அகமதாபாத்தை சேர்ந்தவருக்கு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த 8 மாத ஆண் குழந்தை மற்றும் 3 மாத பெண் குழந்தை என இரண்டு குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வெளிநாடு முதலிய எந்த பயணமும் இவர்கள் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடல்நிலையை கண்காணித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்திருக்கும் நிலையில், பரவிவரும் HMPV வைரஸ் குழந்தைகளை பாதிக்கும் என்பதால் கர்நாடகா சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
அதன்படி பொதுமக்கள் மாஸ்க் அணிய அறிவுறுத்திருக்கும் கர்நாடகா சுகாதாரத்துறை,
இருமல் அல்லது தும்மல் வரும்போது வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்ளுதல்
கைகளை அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கழுவுதல்
அறிகுறி இருந்தால் பொது இடங்களுக்கு வருவதை தவிர்த்தல்
டிஷ்யூ பேப்பர்கள் அல்லது கைக்குட்டைகளை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்த்தல்
நோய்வாய்ப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருப்பதை தவிர்த்தல்
துண்டுகள் மற்றும் துணிகளை மற்றவர்களுடன் பகிர்வதைத் தவிர்த்தல்
கண்கள், மூக்கு மற்றும் வாயை அடிக்கடி தொடுவதைக் தவிர்த்தல்
பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது
நெரிசலான பகுதிகளில் முகமூடிகளை அணிவதன் மூலம் பரவும் அபாயத்தைக் குறைக்கலாம் என அறிவுறுத்தியுள்ளது.