பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்தும்போது, பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகலாம் என்றும் மக்கள் எச்சரிக்கையுடனும் சுகாதாரத்துடனும் இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
நம்மில் பெரும்பாலானோர் அவசரத்திற்காக பேருந்து நிலையம், உணவகங்கள், பொது இடங்களில் உள்ள பொதுக் கழிப்பறைகளை பயன்படுத்துவோம். தினமும் நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்தும் இந்தக் கழிப்பறைகள் தினமும் ஓரிரு முறைகள்தான் சுத்தம் செய்யப்படுகின்றன. சில சமயங்களில், பார்ப்பதற்குச் சுகாதாரமாகத் தெரிந்தாலும் அதில் எண்ணற்ற கிருமிகள் மறைந்திருந்து, நோய்த் தொற்றுக்கு வழிவகுக்கின்றன. குறிப்பாக, மூலம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் கழிவறையைப் பயன்படுத்தும்போது அதிக தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை வெளியேற்றுகிறார்கள்.
இதனால், இரைப்பை குடல் அழற்சியை ஏற்படுத்தும் குடல் பாக்டீரியாக்கள், வயிற்று வலியை ஏற்படுத்தும் ஒட்டுண்ணிகள், தோல் பாக்டீரியாக்கள், பயோஃபிலிம் போன்றவை கழிப்பறை பரப்பில் படிந்து தேங்கிவிடுகின்றன. கழிப்பறை இருக்கை மட்டுமல்லாமல் ஃப்ளஷ் லீவர்கள், குழாய் மூடிகள், கதவு கைப்பிடிகளிலும் இந்த பாக்டீரியாக்கள் அதிகமாக இருக்கின்றன. இவற்றைத் தொடும்போது பல உடல் உபாதைக்கு ஆளாவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள, சோப்பு அல்லது சானிடைசர்கள் மூலம் கைகளை நன்றாகக் கழுவுவது, கை உலர்த்திகளுக்குப் பதிலாக டிஸ்யூ பேப்பர்களைப் பயன்படுத்துவது, முக்கியமாக செல்போனை கழிப்பறையில் பயன்படுத்தாமல் இருப்பது போன்றவை உதவும் என்கிறார்கள் மருத்துவர்கள்.