குறட்டை பிரச்சினை உயிருக்கே ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். CPAP சிகிச்சை மற்றும் சரியான உடல் பராமரிப்பு மூலம் குறட்டை பிரச்சினையை கட்டுப்படுத்தலாம்.
குறட்டை என்பது வெறும் தூக்கக் கோளாறு மட்டுமல்ல, அது ஒரு தீவிரமான உடல்நலப் பாதிப்பின் அறிகுறி என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறட்டைப் பிரச்சினையைச் சரியாகக் கவனிக்காவிட்டால், அது உயர் ரத்த அழுத்தம், இதய நோய், ஸ்ட்ரோக், மற்றும் நீரிழிவு போன்ற உயிருக்கே ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும். உடலில், குறிப்பாகக் கழுத்து மற்றும் அடிவயிற்றுப் பகுதியில் சேரும் அதிகப்படியான கொழுப்பே இதற்கு முக்கியக் காரணம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்..
ஆண்களுக்கு 17 அங்குலம், பெண்களுக்கு 16 அங்குலத்துக்கு மேல் கழுத்துச் சுற்றளவு இருந்தால் சுவாசப் பாதையில் அடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பகல் நேரத்தில் அதிகப்படியான தூக்கம், காலையில் ஏற்படும் தலைவலி மற்றும் கவனச் சிதறல் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும். உடல் எடையில் 5 முதல் 10 சதவீதத்தைக் குறைப்பதன் மூலம் சுவாசப் பாதையை வலுப்படுத்தி, குறட்டைச் சத்தத்தைக் குறைக்க முடியும் என்கிறார்கள் வல்லுநர்கள்.
தூங்குவதற்கு முன் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். தீவிரமான பாதிப்பு உள்ளவர்களுக்கு CPAP (சி-பேப்) சிகிச்சை முறை சிறந்த பலனைத் தரும். சரியான உடல் எடை பராமரிப்பு மற்றும் மருத்துவ ஆலோசனையின் மூலம் இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமான உறக்கத்தைப் பெறலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.