காய்ச்சல் என்றால் மாத்திரை, ரத்த அழுத்தம் இருந்தால் அதற்கேற்ற மருந்து. ஆனால், உங்களுக்கு மன அழுத்தம் இருக்கிறது , இதனால் இந்த வாரம் இரண்டு மணி நேரம் இயற்கையோடு செலவிடுங்கள் என்று மருத்துவர்கள் பிரஸ்கிரிப்ஷன் எழுதினால் எப்படி இருக்கும்? இது கற்பனை அல்ல... உலகின் பல நாடுகளில் இப்படி ஒரு புதிய சிகிச்சை முறையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அதுதான் நேச்சர் பிரஸ்கிரிப்ஷன்.
நாம் விழித்தது முதல் தூங்கும் வரை, கைபேசித் திரை, மடிக்கணினி, ஏசி அறை, சுற்றிலும் கான்கிரீட் கட்டடங்கள் இதுதான் நம் உலகம். ஆனால் மனிதர்கள் உருவானதே இயற்க்கைக்குள்தான். அதனாலயே தற்போது மருத்துவ உலகம் பழைய உண்மையை மீண்டும் நினைவூட்டுகிறது. அதுதான் இயற்கையே மருந்து. அதன்படி இயற்கையோடு செலவிடும்போது, மன அழுத்தம், ரத்த அழுத்தம் கட்டுப்படும், தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும் உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதனால் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில், மன அழுத்தம், வாழ்க்கைமுறை நோய்களால் பாதிப்படைந்தவர்களுக்கு மருந்துடன் சேர்த்து, நேச்சர் பிரஸ்கிரிப்ஷனும் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் இது மருந்துக்கு மாற்று அல்ல, துணை மருத்துவ அணுகுமுறை ஆகும்... இயற்கையை ரசிப்பது ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு மருத்துவ ஆலோசனையாகவும் மாறி வருகிறது.