coffee  reuters
ஹெல்த்

தினமும் காபி குடித்தால் கல்லீரலுக்கு இவ்வளவு நன்மையா? மருத்துவர்களே சொல்லும் ஆச்சரிய தகவல்!

காபி குடிப்பதால் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள்!

PT WEB

தினசரி 2-3 கப் காபி அருந்துவது கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சிரோசிஸ் மற்றும் புற்றுநோய் ஆபத்தை குறைக்க உதவுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிபினால்கள் இதற்குக் காரணம். ஆனால், அளவுக்கு அதிகமாக காபி குடிப்பது பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்.

காபி அருந்துவது மனிதர்களின் கல்லீரல் ஆரோக்கியத்துக்கு பல நன்மைகளை வழங்குவதாக மருத்துவ ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்... உலகளவில் சுமார் மூன்றரை லட்சத்துக்கும் அதிகமான மக்களிடம், 13 ஆண்டுகளாக நடத்தப்பட்ட விரிவான ஆய்வில், காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு கல்லீரல் இழைநார் வளர்ச்சி எனப்படும் சிரோசிஸ் (Cirrhosis), கல்லீரல் புற்றுநோய் மற்றும் கல்லீரல் சார்ந்த இறப்புகள் ஏற்படுவதற்கான ஆபத்து கணிசமாக குறைவது தெரியவந்துள்ளது.

coffee

குறிப்பாக, வழக்கமான காஃபின் (caffeine) கொண்ட காபி மட்டுமல்லாமல், காஃபின் நீக்கப்பட்ட 'டிகாஃப்' (Decaf) காபியும் கூட இதுபோன்ற பலன்களை தருவது தெரிகிறது. காபியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் (antioxidant) மற்றும் பாலிபினால்கள் இதற்கு முக்கிய காரணமாக விளங்குவதாக நிபுணர்கள் விளக்குகிறார்கள்.

அதேசமயம், கல்லீரல் ஆரோக்கியத்துக்கென காபி குடிப்பதில் பிரத்யேகமான அளவுகோல் எதுவும் இல்லை என்றாலும், ஆரோக்கியமான பெரியவர்கள் ஒரு நாளைக்கு 2 முதல் 3 கப் வரை காபி அருந்துவது பாதுகாப்பான மற்றும் ஏற்கத்தக்க அளவாக கருதப்படுகிறது. தினசரி காஃபின் (caffeine) நுகர்வு 400 மில்லிகிராமிற்குள் இருப்பது உடல் நலத்திற்கு நல்லது. இருப்பினும், காபியை அளவுக்கு அதிகமாக 5 கப்களுக்கு மேல் பருகுவது, காஃபின் (caffeine) ஒவ்வாமை உள்ளவர்களுக்குப் பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

coffee

மேலும், காபியில் அதிக அளவு சர்க்கரை, சுவையூட்டப்பட்ட சிரப்புகள் அல்லது கிரீம்களைச் சேர்ப்பது கலோரி அளவை அதிகரித்து, குறிப்பாக கல்லீரல் கொழுப்புப் பிரச்சனை அல்லது உடல் பருமன் உள்ளவர்களுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

காபி என்பது நமது சீரான வாழ்க்கை முறையின் ஒரு சிறிய அங்கம் மட்டுமே தவிர, அது எந்தவொரு கல்லீரல் நோய்க்கான முழுமையான சிகிச்சையோ அல்லது தடுப்பு மருந்தோ அல்ல என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கல்லீரலைப் பாதுகாக்க சீரான உணவு முறை, வழக்கமான உடல் பயிற்சி, சரியான உடல் எடையைப் பராமரித்தல், மதுவை தவிர்த்தல் மற்றும் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல் போன்ற ஆரோக்கியமான பழக்கவழக்கங்களே மிக அவசியமானவை என்று மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.