ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை புதிய தலைமுறை
ஹெல்த்

சென்னை: அறுபட்ட கைகளை அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் இணைத்த அரசு மருத்துவர்கள் சாதனை!

சென்னையில் தாயின் கைகளை மகனே வெட்டி துண்டாக்கிய கொடூர சம்பவம் அரங்கேறிய நிலையில், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள், பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் துண்டான கைகளை இணைத்து சாதனை படைத்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: சுரேஷ்குமார்.

சென்னையில் தாயின் கைகளை மகனே வெட்டி துண்டாக்கிய கொடூர சம்பவம் அரங்கேறிய நிலையில், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள், பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் துண்டான கைகளை இணைத்து சாதனை படைத்துள்ளனர்.

சென்னை பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் மீது கடந்த 20 ஆம் தேதி இரவு திடீரென அவரது மகன் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் அப்பெண்ணின் இரண்டு கைகளிலும் வெட்டு விழுந்தது. வலது கை முழங்கைக்கு மேலே துண்டாகி தொங்கிக் கொண்டிருந்தது. இடது கையின் மணிக்கட்டு பகுதி துண்டானது.

உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மிகவும் மோசமான நிலையில் கைகள் துண்டாகி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உயர் சிகிச்சை தேவை என்பதை உணர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை

மிகப்பெரிய அளவில் ரத்த நாளங்கள், நரம்புகள் பாதிக்கப்பட்டு இரண்டு கையையும் இழக்க வேண்டிய நிலையில் இருப்பது மருத்துவர்களின் பரிசோதனையில் தெரிந்தது. இப்படிப்பட்ட சூழலில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொண்டு கைகளை இணைத்து காப்பாற்ற மருத்துவ குழுவினர் திட்டமிட்டனர். இதன் பிறகு 19 மருத்துவர்கள் அடங்கிய குழு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள விரைவாக ஏற்பாடு செய்யப்பட்டது.

பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவர்கள், சுகுமார் ரஷிதா தலைமையிலான மருத்துவக் குழு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள தொடங்கினர். இக்குழு 8 மணி நேரம் போராடி, பெண்ணின் துண்டான இரண்டு கைகளை வெற்றிகரமாக இணைத்தனர். தற்பொழுது மருத்துவ கண்காணிப்பில் தொடர் சிகிச்சையில் அப்பெண் உள்ளார்.

அறுவை சிகிச்சை கோப்புப்படம்

கைகளை காப்பாற்றவே முடியாது என்ற நிலையில் வந்த பெண்ணிற்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் மூலமாக மறுவாழ்வு கொடுத்துள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் மருத்துவக் குழுவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.