அடுத்த முறை ரீசார்ஜ் பண்றதுக்கு முன்னாடி, இத கவனிக்க மறந்துடாதீங்க...!
முன்பெல்லாம் மாதத்திற்கு 2ஜிபி டேட்டாவே போதுமானதாக இருக்கும். இப்போதெல்லாம் 60 ஜிபி கூட போதாக்குறையாகவே இருக்கிறது. இதை ஒரு காரணமாக வைத்துத்தான் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தினசரி, வார, மாதம் என எந்த பேக்காக இருந்தாலும், அதில் இணையத்துக்கான வசதியை இணைத்து நம் பர்ஸை பதம் பார்த்து வந்தன. நாமும் இணையத்தேவைக்கு அடிக்ட் ஆகிவிட்டதால், அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டதேயில்லை.
ஆனால், நம் நாட்டில் இன்னும் பலர் இணைய சேவை இல்லாத மொபைல்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். அட, அவர்களைக்கூட விட்டுவிடுங்கள் . நம்மில் பெரும்பாலானோர் டூயல் சிம் வைத்திருப்போம். அதில் முதல் சிம்மில் தான் கால் வசதி, இணைய வசதி எல்லாம் வைத்திருப்போம். மாதம் குறைந்தது 300 ரூபாய்க்கு ரீசார்ஜும் செய்துவருவோம். முதல் சிம் சிக்னலில் படுத்துவிட்டால் மட்டுமே அந்த இரண்டு சிம்மை பயன்படுத்துவோம். ஆனா, அந்த சிம்மிற்கும் இணைய வசதியுடன் கூட சந்தாக்களை மட்டுமே நம்மால் கட்ட முடியும். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதில் லாபம் பார்த்துவந்த சூழலில் தற்போது அதற்கும் வேட்டு வைத்திருக்கிறது தொலைத்தொடர்பு துறை.
கால் வசதி, SMS வசதி. இந்த இரண்டை மட்டும் வைத்து புதுவிதமான மாதாந்திர பேக்குகளை உருவாக்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கட்டளையிட்டு இருக்கிறது TRAI. இதில் இணைய வசதியை இணைக்கக்கூடாது என தெளிவாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா நகர்விற்கு இது முட்டுக்கட்டையாக இருக்கும் என தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சாக்கு சொல்லியிருக்கின்றன. ஆனாலும், தன் முடிவில் உறுதியாக இருக்கிறது டிராய். விரைவில், இணைய வசதி இல்லாத மாதாந்திர சந்தாக்களும் அறிமுகமாகவுள்ளன.
இந்தியாவில் கிட்டத்தட்ட 15 கோடி இணைய வசதி இல்லாத மொபைல்களைத்தான் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த முறை ரீசார்ஜ் செய்யும் முன், இதை கவனிக்க மறந்துடாதீங்க.