அதிகளவு காப்பீடு பலன் தரப்பட்ட நோய்கள் பட்டியலில் புற்றுநோய் முதலிடத்திலும் இதய நோய்கள் 2ஆவது இடத்திலும் இருப்பதாக மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மருத்துவ காப்பீடு நிறுவனங்களின் தரவுகளை ஆய்வு செய்து மெடிஅசிஸ்ட் ஹெல்த் சர்வீசஸ் என்ற மருத்துவசேவை நிறுவனம் ஒன்று அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இதன்படி புற்றுநோய்க்கு காப்பீடு பலன் பெற்றவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 12% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய்க்கான காப்பீடு பலன் பெறுவதில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை ஒன்றரை மடங்கு அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.
புற்றுநோய்க்கு அடுத்தபடியாக இதயநோய் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் காப்பீடு பலன் பெற்றுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது. எனினும் இதய நோய்க்கான காப்பீடு பலன்கள் கோருவதில் பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கை ஒன்றரை மடங்கு அதிகம் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. சுவாச நோய்களுக்கான சிகிச்சை செலவுகள் அதிகபட்சமாக 13% வரையும் புற்றுநோய் சிகிச்சை செலவுகள் 6.5% வரையும் இதய நோய்கள் சிகிச்சை செலவுகள் 8% வரையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவிற்கு பிறகு சுவாச பிரச்சினைகள் குறித்த அச்சம் மக்களிடம் அதிகரித்துள்ளதாகவும் இதன் காரணமாக மருத்துவமனைக்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களை பொறுத்தவரை கண்புரை பிரச்சினைக்காகவே அதிகம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாகவும் மருத்துவ ஆய்வு கூறுகிறது.