மார்பகப் புற்றுநோய் சிகிச்சையில் புதிய புரட்சி.. பக்கவிளைவுகளை இனி தடுக்கலாமா.. ஆச்சர்யத் தகவல்!
ஐஐடி கௌஹாத்தியை சேர்ந்த ஆய்வாளர்கள் சிலர், மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும் வகையிலான ஒரு கண்டுபிடிப்பை கண்டறிந்துள்ளனர். அப்படி என்ன கண்டுபிடிப்பு அது? ஏன் அது முக்கியத்துவம் பெறுகிறது? இதுகுறித்து நம் ஊர் மருத்துவர்கள் சொல்வதென்ன? அறியலாம்...
ஐஐடி ஆய்வாளர்கள், ஊசி மூலம் செலுத்தும்படியான ஹைட்ரோஜெல் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ஹைட்ரோஜெலை ஒருவரின் உடலில் செலுத்துகையில், இதிலுள்ள மருந்து மார்பகப் புற்றுநோயை உருவாக்கும் செல்களை மட்டும் நேரடியாக டார்கெட் செய்யுமாம். அதாவது இந்த ஹைட்ரோஜெல், புற்றுநோய் எதிர்ப்பு மருந்தை, உடலுக்குள் இருக்கும் ‘புற்றுநோய் பாதிக்கப்பட்ட செல்களுக்கு மட்டும்’ கொண்டு செல்லும் என சொல்லப்படுகிறது. இதன்மூலம் பாதிக்கப்பட்ட செல்களை சுற்றியுள்ள ஆரோக்கியமான செல்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாது இருக்கும். அந்தளவுக்கு கட்டுப்படுத்தப்பட்ட முறையில் மருந்தை இது வெளியிடுமென ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
ஐஐடி கௌஹாத்தி மற்றும் கொல்கத்தாவின் போஸ் இன்ஸ்டிடியூட் ஆகியவை இணைந்து கண்டறிந்துள்ள இந்த ஹைட்ரோஜெல் வழக்கமான புற்றுநோய் சிகிச்சையுடன் தொடர்புடைய பக்க விளைவுகளை குறைக்கும் என்றுள்ளனர் ஆய்வாளர்கள். உதாரணத்துக்கு, தற்போதுள்ள கீமோதெரபி மூலம் புற்றுநோய் சிகிச்சை செய்கையில், உடலின் உள்ளுறுப்புகள் சேதமடைய வாய்ப்புள்ளது. ஆனால் ஹைட்ரோஜெல், புற்றுநோயை ஏற்படுத்தும் பகுதியை மட்டும் டார்கெட் செய்து செயல்படும் என்பதால், பிற பகுதிகளின் சேதம் தவிர்க்கப்படும் என்கிறார்கள். இந்த கண்டுபிடிப்பு Materials Horizons என்ற இதழில் Royal society of Chemistry-ல் வெளியாகி உள்ளது.
இந்த கண்டுபிடிப்பு குறித்து, சென்னையை சேர்ந்த மார்பகப் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை மருத்துவர் மஞ்சுளா ராவிடம் நாம் பேசினோம். அவர் தெரிவிக்கையில், “ஹைட்ரோஜெல் என்பது, மருந்தை எடுத்துச் செல்லும் ஒரு வழி. இந்த சிகிச்சையும் கீமோதெரபியின் ஒரு வகைதான். ஊசியில் ஏற்றப்படும் ஹைட்ரோஜெல் மூலம் நாம் மருந்தை குறிப்பிட்ட புற்றால் பாதிக்கப்பட்ட செல்களுக்கு மட்டும் பிரத்யேகமாக அனுப்ப முடியும்.
நான் சொன்னதுபோல, ஹைட்ரோஜெல் என்பது மருந்தை எடுத்துச் செல்லும் ஒரு வழி மட்டுமே என்பதால் மார்பகப் புற்றுநோய்க்கு மட்டுமல்லாமல், எல்லா வகை புற்றுநோய் சிகிச்சைக்கும் ஹைட்ரோஜெல் கண்டுபிடிப்பானது உதவும்.
இதுவே இப்போதுள்ள கீமோதெரபி சிகிச்சையில், நரம்புகளுக்குள் நேரடியாக மருந்து செலுத்தப்படுகிறது. இதனால் உடலில் புற்று பாதிப்பில்லாத பிற பகுதிகள், ரத்தம் போன்றவற்றில் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தலைமுடி உதிர்தல் தொடங்கி உடல் எடை குறைதல் போன்றவை ஏற்படும் விளைவுகள் வரை பலவற்றை உதாரணமாக சொல்லலாம். அந்த பக்க விளைவுகள், ஹைட்ரோஜெல் வழியான சிகிச்சைகள் மூலம் குறையக்கூடும்.
அதேநேரம், இந்த ஹைட்ரோஜெல் கண்டுபிடிப்பானது எலிகள் அளவில்தான் பரிசோதிக்கப்பட்டுள்ளதே தவிர, இன்னும் மனிதர்கள் மத்தியில் வரவே இல்லை. ஆகவே இதில் பக்கவிளைவுகளே இருக்காதென நம்மால் முழுமையாக கூற முடியாது. எதுவாக இருந்தாலும், முழு ஆய்வும் முடிந்த பிறகுதான் கூற முடியும்.
இப்படியொரு கண்டுபிடிப்பு இந்தியாவை சேர்ந்த ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது வரவேற்கத்தக்க விஷயம். இருப்பினும் இதன் பயன்பாடு, வழிமுறை எல்லாம் ஆய்வக அளவிலேயே இன்னும் முழுமை பெறவில்லை என்பதால் எடுத்தவுடன் இதை நாம் கொண்டாடிவிட முடியாது. சற்று காத்திருந்து, அனைத்து ஆய்வுகளும் முடிந்தபின்... அப்போது இதுகுறித்து விவாதிப்பதும், கொண்டாடுவதும் சரியாக இருக்கும்” என்றார்.