புற்றுநோய் pt web
ஹெல்த்

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை.. 5 ஆண்டுகளில் 30% அதிகரிப்பு

தமிழ்நாட்டில் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை ஐந்து ஆண்டுகளில் 30% அதிகரித்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த பெருஞ்செய்தியைப் பார்க்கலாம்.

PT WEB

தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 78,687 ஆக இருந்த புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை தற்போது ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரித்திருக்கும் என அரசிடம் உள்ள தரவுகள் கூறுகின்றன. இதன் பொருள் தமிழ்நாட்டில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 30%  அதிகரித்துள்ளது என்பதே.  சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் சிகிச்சை மையம் மற்றும் தமிழக சுகாதாரத் துறை இணைந்து நடத்திவரும் 'தமிழகப் புற்றுநோய் பதிவேடு திட்டம்' மூலம் இந்தத் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

புற்றுநோயாளிகள் அதிகரிப்புக்கு பலகாரணங்கள் கூறப்படுகின்றன.  நோயறிதல் முறைகள் மேம்பட்டிருப்பதும், நோய்குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பதும் ஒரு காரணம். அதேசமயம், மரபணு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளும் இதற்குப் பங்களிக்கின்றன.

0-74 வயதுக்கு உட்பட்டவர்களில், ஒவ்வொரு 11 பெண்களில் ஒருவரும், ஒவ்வொரு 12 ஆண்களில் ஒருவரும் தங்கள் வாழ்நாளில் புற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்து இருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது. புற்றுநோய்க்கு ஆளாகும் பெண்களில் 50 விழுக்காட்டினர் பிறப்புறுப்பு சார்ந்த புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோயில் வாய்ப் புற்றுநோய் முதல் இடம் வகிக்கிறது. வயிற்றுப் புற்றுநோயும் பெருங்குடல் புற்றுநோயும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

தாமதமான திருமணம், குறைவான குழந்தைகள் மற்றும் உடல் பருமன் போன்ற காரணிகள் நகர்ப்புறப் பெண்களிடையே  மார்பகப்புற்று நோயை அதிகரிக்கின்றன. அதேபோல, மேம்பட்ட பரிசோதனை வசதிகள் காரணமாக நகர்ப்புறங்களில் இந்த நோய் அதிகளவில் கண்டறியப்படுகிறது. கிராமப்புறங்களில் கருப்பை வாய்ப் புற்றுநோய் பெண்களுக்கு முக்கியப் பிரச்சனையாக உள்ளது.

தமிழ்நாட்டில் புற்றுநோய் உயிரிழப்ப்பு குறித்த தரவுகள் முழுமையாகப் பதிவு செய்யப்படுவதில்லை. 40% புற்றுநோய் உயிரிழப்புகள் மட்டுமே முறையான மருத்துவ சான்றிதழைப் பெறுகின்றன. குறிப்பாக கிராமப்புறங்களில் நிகழும் பெரும்பாலான மரணங்கள் வீட்டிலேயே நடப்பதால், அவற்றை முறையாகப் பதிவுசெய்ய முடிவதில்லை என்று மருத்துர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சைகளுக்கான வசதிகள் மேம்பட்டிருந்தாலும், தாமதமான நோயறிதல் காரணமாக நோயாளிகள் உயிர்பிழைக்கும் விகிதம் குறைவாகவே உள்ளது. உதாரணமாக, சில புற்றுநோய்களுக்கான பிழைப்பு விகிதம் 30%க்கும் கீழ் குறைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கிராமப்புறங்களில் இருந்து வரும் பெரும்பாலான நோயாளிகள், புற்றுநோய் முற்றிய நிலையில் சிகிச்சைக்கு வருவதால், அரசு மருத்துவமனைகளில் பிழைப்பு விகிதம் குறைவாக இருக்கிறது. ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிந்தால், நோயிலிருந்து முழுமையாக மீள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இது, விழிப்புணர்வின் அவசியத்தை உணர்த்துகிறது