செய்தியாளர்: பால வெற்றிவேல்
இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எண்டோஸ்கோபி கருவியை பயன்படுத்தி மார்பகப் புற்றுநோய் அறுவை சிகிச்சையை செய்து முடித்துள்ளனர்.
இந்தியாவில் சமீபத்திய நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி ஒரு லட்சம் பெண்களில் 25 ஆயிரம் பேருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
மார்பகப் புற்று நோய்க்கு எதிரான சிகிச்சை முறைகள் வளர்ச்சி கண்டுள்ள நிலையில் சென்னை அப்பலோ புற்றுநோய் மையம் புதிய முறையில் மார்பகப் புற்றுநோயை குணப்படுத்தியுள்ளது. பொதுவாக மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டவர்களுக்கு மருந்து, கதிர்வீச்சு, மார்பகம் அகற்றம், ஹார்மோன்ஸ் போன்ற முறைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மருந்து மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை முறையினால் பக்க விளைவுகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு இருப்பதன் காரணமாக மார்பகத்தை அகற்றும் சிகிச்சை முறையும் அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் அவ்வாறு மேற்கொள்ளப்படும் சிகிச்சைக்கு உயர்ரகதொழில்நுட்பக் கருவிகள் அவசியம் என்பதால் பெரும்பாலான மருத்துவமனைகளில் அவை மேற்கொள்ள முடியவில்லை.
இந்நிலையில்தான் சென்னை அப்பல்லோ மருத்துவமனையை சேர்ந்த மார்பக புற்றுநோய் நிபுணர் மஞ்சுளா ராவ் தலைமையிலான மருத்துவர்கள் 46 வயது பெண்ணுக்கு நூல் குழாய் பயன்படுத்தி மார்பகப் புற்றை அகற்றியதோடு மார்பகத்தை மறு கட்டமைப்பும் செய்துள்ளனர்.
எண்டோஸ்கோப் என்பது கேமரா மற்றும் நுண் இழை உள்ளிட்டவற்றைக் கொண்ட அமைப்பாகும். இதன் மூலம் உடலுக்குள் இருக்கும் பகுதியை கண்காணித்து அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
எண்டோஸ்கோபியை பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே இதுவரை புற்றுநோய் அறுவை சிகிச்சைகள் நடைபெற்ற நிலையில் இந்தியாவிலும் அதற்கான தேவை அதிகரித்துள்ளது.